சென்னை எம்.ஆர்.நகர் சந்திப்பு அருகே நேற்று முன்தினம் இரவு கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேக நிலையில் வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். இதில், காருக்குள் காவலர்கள் பயன்படுத்தும் தொப்பி, லத்தி, போலி நம்பர் பிளேட்கள் ஆகியவை இருப்பது காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இத்தனை தொடர்ந்து காரில் இருந்த 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், காவல்துறையினர் எனக்கூறி குருவி, ஹவாலா பணத்தை குறிவைத்து கொள்ளை அடிக்கும் கும்பலின் தலைவனான வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த இம்ரான், அவனது கூட்டாளிகளான கருணாகரன், நூர்முகமது, மாபாட்ஷா எனத் தெரியவந்தது. மேலும் தொடர்ந்த விசாரணையில் ₹1.40 கோடி ஹவாலா பணத்தை காவல்துறையினர் எனக்கூறி கொள்ளை அடித்து சென்ற வழக்கில் இம்ரான் முக்கிய குற்றவாளி எனத் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, தான் பல ஆண்டுகளாக குருவிகள் மற்றும் ஹவாலா பணத்தரகர்களை குறிவைத்து, அவர்கள் பணத்தை கைமாற்றும்போது, அவர்களை மறைந்திருந்து கொள்ளையடிக்கும் கும்பலுக்கு மூளையாக செயல்படுவதும், காவல்துறையினரை போல் நடித்து இக்கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருவதை வழக்கமாக வைத்திருந்தது தெரிய வந்ததுள்ளது.