மத்தியில் ஆளும் பாஜக அரசு வரி வருவாயிலிருந்து மாநில அரசுகளுக்கான வரி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை நேற்று விடுவித்து. இதில் பாஜக ஆளும் உத்தரபிரதேசத்துக்கு அதிக தொகையும், தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வரி பகிர்வு குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு உள்பட 28 மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 2024 அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தொகையும் தவணையும் அடங்கும். வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுப்படுத்தவும், மாநிலங்களின் வளர்ச்சி, நிதி திட்டங்களின் செலவினங்களுக்கு நிதியளிக்கவும் ஏற்ற வகையில் இந்த வரி பகிர்வு விடுவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு ரூ.31,962 கோடியும் அதையடுத்து பீகாருக்கு ரூ.17,921 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.13,404 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.11,255 கோடி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு ரூ.10,737 கோடி பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகப்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தென்மாநிலங்களான தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடி, ஆந்திரபிரதேசத்துக்கு ரூ.7,211 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.6,498 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.3,745 கோடி மற்றும் கேரளாவுக்கு ரூ.3,430 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.