விழுப்புரம் நகராட்சியில் நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் முதல் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அதிகாரிகள், தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் குடும்ப சேமநல நிதி (PF) கருவூலத்தில் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சமீபத்தில் தொழிலாளி ஒருவர் தனது PF பணத்தை எடுக்க சென்றபோது பணம் இல்லாதது குறித்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கருவூல அதிகாரிகளும் தொழிலாளர்களின் சேமநலநிதி செலுத்தவில்லை என்று தணிக்கை துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், கடந்த 2021-ஆ ம் ஆண்டு விழுப்புரம் நகராட்சியில் கணினி ஆபரேட்டர் ஒருவருக்கு உதவியாக அங்கு பணியாற்றும் பெண் ஒருவரின் தத்து மகன் வினித் என்பவரை உதவிக்கு வைத்திருந்தாராம். வினித் அதிமுகவில் இளைஞர், இளம்பெண் பாசறை நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.
அப்போது நகராட்சியிலிருந்து கருவூலத்திற்கு அனுப்பும் வரவு செலவு கணக்கு விவரங்களை வினித் பார்த்து வந்துள்ளார். இதில் அதிகாரிகள், தொழிலாளர்களுக்கு செலுத்தப்படும் PF பணத்தை கருவூலத்திற்கு செலுத்தாமல் சுருட்டியது தெரியவந்தது.
தற்போது வரை சுமார் ரூ.12 கோடி வரை தொழிலாளர்களின் PF பணம் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். இந்நிலையில், நகராட்சி ஆணையரின் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக நிர்வாகி வினித், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தார். இத்தனைதொடர்ந்து அதிமுக நிர்வாகி வினித்திடம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.