உச்ச நீதிமன்றம் அதிரடி: வாதங்கள் நிறைவடைந்த வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை..!

வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்து சாட்சியங்களையும் விசாரித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், மீண்டும் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்த சாந்தி என்பவரின் கணவர் கடந்த 2013-ஆம் ஆண்டு வடிவேல் என்பவரால் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இதுதொடர்பான வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் கொலையை நேரில் பார்த்த இரண்டாவது சாட்சியாக சாந்தி சேர்க்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து அவர் நீதிமன்றத்திலும் நேரடியாகவே தனது சாட்சியை வழங்கி இருந்தார். பிறகு இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்து எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற சூழலில் சாந்தி மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் புதியதாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், “வழக்கில் ஐந்து புதிய சாட்சியங்கள் இருப்பதாகவும், அவற்றை விசாரிக்க காவல்துறை தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டி தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் ஏற்க மறுத்து நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் புதிய சாட்சியங்களிடமும் வாக்குமூலங்களை பெற்று மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டு வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வடிவேல் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணைகள் அனைத்தையும் முடித்த நிலையில் தீர்ப்பை கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், “இதில் எந்த ஒரு வழக்கிலும் ஏற்கனவே வழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்து, சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்னும் பட்சத்தில் அதற்குப் பிறகு மீண்டும் புதியதாக சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் அனுமதி இல்லை. அவ்வாறு செய்யவும் முடியாது.

எனவே இந்த விவகாரத்தில் இரண்டாவதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவு ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. மேலும் நிலுவையில் உள்ள வழக்கை எட்டு வார காலத்திற்குள் விசாரித்து புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்வும் தீர்ப்பளித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.