“என்னை தாங்கிப் பிடித்துள்ள தாயுமானவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கோடி. பல நூறு ஆண்டுகள் பெரும் தவம் செய்தாலும், உலகு காக்கும் உயர் கொள்கைக் கொண்டவரின் இந்த உன்னதமான அன்பை பெற இயலுமோ? உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்.. வாழ்நாள் முழுமைக்கும்.!” என நெகிழ்ந்து செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு பல கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, கடந்த 26 -ஆம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. கைது செய்து சிறையிலேயே வைத்து விடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” என பதிவிட்டு இருந்தார்.
அதைத்தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இலாகாக்கள் மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. சென்னை தலைமைச் செயலகம் சென்று, கோப்புகளில் கையெழுத்திட்டு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக மீண்டும் பொறுப்புகளை செந்தில் பாலாஜிஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இணைத்தது குறித்தும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், மற்ற 4 புதிய அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டார் அந்த அறிக்கையில், செந்தில் பாலாஜியின் தியாகம் குறித்துக் கூறி இருந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதனைக் குறிப்பிட்டு நெகிழ்ந்து போய் முதல்வர் ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி எக்ஸ் பக்கத்தில், “செந்தில்பாலாஜியின் தியாகத்தை நான் வாழ்த்தியதைச் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை வைத்து கழகத்துக்கு எதிரான சதிச் செயல்களைச் செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக 15 மாத சிறையை ஏற்றதுதான் தியாகம். தன்னால் இயக்கத்துக்குக் களங்கம் வரக்கூடாது என்று நினைப்பவர்களால்தான் இந்த இயக்கம் இயங்குகிறது’ என இன்றைய அறிக்கையில் என்னை தாங்கிப் பிடித்துள்ள தாயுமானவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கோடி. வாழ்நாள் முழுமைக்கும்: பல நூறு ஆண்டுகள் பெரும் தவம் செய்தாலும், உலகு காக்கும் உயர் கொள்கைக் கொண்டவரின் இந்த உன்னதமான அன்பை பெற இயலுமோ? உங்கள் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறேன்.. வாழ்நாள் முழுமைக்கும்.!” என நெகிழ்ந்து செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார்.