சமூக வலைதளங்களில் மூதாட்டி ஒருவர் ஓய்வூதியம் பெற உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு 2 கி.மீ. தூரம் ஊர்ந்து சென்ற வீடியோ பரவியது. இதையடுத்து இனி அந்தப் பெண்மணிக்கு வீட்டுக்கே சென்று ஓய்வூதியம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டம், ரைசுவான் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி பத்தூரி தெகூரி. சில ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து மாநில அரசின் மதுபானி ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளியாக பத்தூரி சேர்க்கப்பட்டார். மாதந்தோறும் உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகம் வந்து ஓய்வூதியத்தை பெற்றுச் செல்லுமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
இந்நிலையில் நடக்க முடியாத நிலையில் இருக்கும் பத்தூரி கடந்த சில தினங்களுக்கு முன் ஓய்வூதியம் பெறுவதற்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்துக்கு ஊர்ந்து சென்றார். அவர் ஊர்ந்து செல்லும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. ‘‘ஓய்வூதியம் வழங்க யாரும் வீட்டுக்கு வராததால், வேறு வழியின்றி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு ஊர்ந்து சென்றேன்” என்று அந்த மூதாட்டி தெரிவித்தார்.
சமூக நலத்திட்ட உதவிகள் வீட்டுக்கே வந்துசேரும் என உறுதி அளிக்கப்படும்போதிலும் அதைப் பெறுவதற்கு மூதாட்டி ஒருவர் ஊர்ந்து செல்லவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து, ‘‘அந்தப் பெண்மணிக்கு ஓய்வூதியம் இனிமேல் அவரது வீட்டுக்கே சென்று வழங்கப்படும். அவருக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்படும்’’ என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.