“டெல்லிக்கு ஒரேயொரு முதலமைச்சர்தான்; அவரே அரவிந்த் கெஜ்ரிவால்” என்று டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ள அதிஷி மர்லினா தெரிவித்துள்ளார். டெல்லியின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியினரால் தேர்வு செய்யப்பட்ட அதிஷி மர்லேனா சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு வழங்கிய டெல்லியின் பிரபலமான முதலமைச்சரும், எனது குருவுமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். முதல்முறை அரசியல்வாதி ஒருவர் முதலமைச்சராக வருவது எல்லாம் ஆம் ஆத்மி கட்சியில் மட்டும்தான் நடக்கும். நான் வேறு கட்சியில் இருந்திருந்தால் எனக்கு தேர்தலில் நிற்க கூட இடம் கிடைத்திருக்காது.
அரவிந்த் கெஜ்ரிவால் என்னை நம்பினார். என்னைச் சட்டப்பேரவை உறுப்பினராக்கினார். இன்று முதலமைச்சர் பொறுப்பைக் கொடுத்துள்ளார். அவர் என் மீது காட்டும் அதிகப்படியான நம்பிக்கை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. என்றாலும் எனது மூத்த சகோதரர் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்வது வேதனை அளிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் டெல்லியின் இரண்டு கோடி மக்களின் சார்பில் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது, டெல்லிக்கு என்றுமே ஒரே முதலமைச்சர் தான். அவர் அரவிந்த் கெஜ்ரிவால்தான்.
இந்தப் பொறுப்பை என் தோல்களில் சுமக்கும் வரை எனது குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான். அது டெல்லி மக்களை பாதுகாப்பது, அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின்படி டெல்லி அரசை வழிநடத்துவது. அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் கல்வி, சுகாதாரம், இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள் பாதிக்கப்படும் என டெல்லி மக்களுக்கு தெரியும்” என அதிஷி மர்லேனா சிங் தெரிவித்தார்.