கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்ததாத ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியிலிருந்து நாகர்கோவில் வடசேரியை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து அழகப்பபுரம் பகுதியில் சென்றபோது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் பேருந்தை நிறுத்தும்படி கை காட்டினர். ஆனால் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் காரில் சென்று பேருந்தை நிறுத்தினர். பின் பேருந்து ஓட்டுனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். தற்போது ஓட்டுநனரிடம் வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதனடிப்படையில், அரசு பேருந்து ஓட்டுநர் ஸ்டிபன், நடத்துனர் மணிகண்டன் ஆகியோரை நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.