வழக்கு போடாமல் இருக்க தலா 2 ஆயிரம்.. காவலரை சிக்க வைத்த ரயில்வே ஊழியர்கள்..!

தஞ்சாவூரை சேர்ந்த மணிவண்ணன், ரமேஷ் ஆகிய இருவரும் சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் தங்கி, தாம்பரம் ரயில்வே யார்டில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார்கள். மணிவண்ணன், ரமேஷ் இருவரும் ரயில்வே யார்டு பகுதியில் அமர்ந்து மது அருந்தி உள்ளார்கள். அப்போது அங்கு சாதாரண உடையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், தாங்கள் காவல்துறையினர் எனக்கூறி இருவரையும் தாக்கினர். மேலும் அவர்கள் மேல் வழக்கு போடாமல் இருக்க தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4 ஆயிரம் தரும்படி கேட்டார்களாம்.

ஆனால் கையில் பணம் இல்லாததால் மணிவண்ணன் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறாராம். இருவரும் தாக்கியதில் காயம் அடைந்த மணிவண்ணன் மற்றும் ரமேஷ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். காயத்துக்கான காரணம் குறித்து மருத்துவர் கேட்டபோது, நடந்த சம்பவத்தை கூறினர். இதனால் மருத்துவமனையில் இருந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சேலையூர் காவலர்கள் நேரில் வந்து விசாரித்தனர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மணிவண்ணன் மற்றும் ரமேஷ் ஆகியோரை தாக்கி பணம் பறித்தது, தாம்பரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்து வரும் அருண்ராஜ் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் காவல்துறையில் வேலை செய்த சதீஷ்குமார் என்பதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட விசாரணையில் இவர்கள் இருவரும் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் சாலையோரம் மது அருந்துபவர்கள், ஜோடியாக நின்று பேசிக் கொண்டிருப்பவர்களை காவல்துறை என மிரட்டி பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்தது.