9 வங்கிகளில் ரூ.27,000 கோடி கடன் மோசடி வழக்கில் ஆம்டெக் குழுமத்தின் ரூ.5,000 கோடி சொத்து முடக்கம்..!

வங்கி கடன் மோசடி வழக்கில், நாடு முழுவதும் ஆம்டெக் குழுமத்துக்கு சொந்தமாக உள்ள ரூ.5,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ஆம்டெக் குழுமம் மகாராஷ்டிரா வங்கி, ஐசிஐசிஐ, ஐடிபிஐ, எஸ்பிஐ, கனரா வங்கி உள்ளிட்ட 19 வங்கிகளிடமிருந்து ரூ.27,000 கோடியை கடனாக பெற்றுள்ளது. வாங்கிய கடனை சட்டவிரோதமாக முறையில் பல்வேறு போலி நிறுவனங்களை உருவாக்கி அதில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்டது.

இதன் மூலம் வங்கிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து புகார் அளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை தொடர்ந்து சிபிஐ முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் இந்த வழக்கை கையில் எடுத்து விசாரித்து வந்தது.

அதன்தொடர்ச்சியாக, கடந்த ஜூலை மாதம் ஆம்டெக் குழுமத்தின் தலைவர் அரவிந்த் தாம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக ஆம்டெக் குழுமத்துக்கு சொந்தமான ரூ.5,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை தற்போது முடக்கியுள்ளது. இதில், பண்ணை வீடுகள், பல்வேறு மாநிலங்களில் உள்ளநூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய மற்றும் தொழில்துறைக்கான நிலங்கள், கடன்பத்திரங்கள் உள்ளிட்டவை அடங்கும் என அமலாக்கதுறை தெரிவித்துள்ளது.