நாட்டின் 77-வது சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்ளவில்லை. அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை காலியாக இருந்ததது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “எனக்கு கண் தொடர்பான சில பிரச்சினைகள் இருந்தது. நெறிமுறைகளின்படி நான் 9.20 மணிக்கு என்னுடைய வீட்டில் மூவர்ணக்கொடி ஏற்றவேண்டும்.
அதன் பின்னர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து அங்கும் தேசிய கொடி ஏற்றவேண்டும். அதனால் என்னால் செங்கோட்டைக்கு செல்ல முடியவில்லை. அங்கு பாதுகாப்பு கெடுபிடி வேறு இருந்ததது. பிரதமர் வெளியேறுவதுக்கு முன்பாக அவர்கள் மற்றவர்களை வெளியேற அனுமதிப்பதில்லை. அதனால் என்னால் நேரத்துக்கு இங்கு வந்திருக்க முடியாது. நேரமின்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் நான் அங்கு செல்லாமல் இருப்பது நல்லது என்று நினைத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.