நூற்றாண்டு கண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் பழமையான வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு இந்த சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு பல்வேறு வழக்குகள் காரணமாக இந்த தேர்தல் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த தேர்தல் நடந்தபோது பிரச்சினை ஏற்பட்டதால் தேர்தல் பாதியில் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த சங்கத் தேர்தலை தேர்தல் நடத்தும் அலுவலராக மூத்த வழக்கறிஞர் கபீர் நியமிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி எம்எச்ஏஏ வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்களில் வாக்களிக்க தகுதியான 4,752 வழக்கறிஞர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளநிலை செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 16 பதவிகளுக்கு தேர்தல் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தேர்தல் நேற்று நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு 9 பேரும், துணைத் தலைவர் பதவிக்கு 8 பேரும், செயலாளர் பதவிக்கு 10 பேரும், பொருளாளர் பதவிக்கு 9 பேரும், நூலகர் பதவிக்கு 11 பேரும், மூத்த செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 42 பேரும், இளைய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 35 பேரும் போட்டியிட்டனர்.
உயர் நீதிமன்றத்தி்ல் உள்ள எம்எச்ஏஏ சங்க கட்டிடத்தில் சிஐஎஸ்எப் மற்றும் தமிழக காவல்துறையினரின் ஐந்தடுக்கு பாதுகாப்புடன் காலை 10 மணி்க்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் கட்டிடத்துக்கு வெளியே 2 பெரிய திரைகளில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.