காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பி.யுமான ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்பி., ஆக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் மோடி சமூகத்தினர் குறித்து தவறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், சூரத் நீதிமன்றம் இரு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதன் பேரில் அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனால், அவர் எம்பி பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீண்டும் வாயநாடு எம்பி. யாக பொறுப்பு ஏற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்துக்கு சென்றார். மீண்டும் பதவி ஏற்ற பின் அவர் முதல் முறையாக வயநாடு தொகுதிக்கு இன்று செல்கிறார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக பகல் 12 மணியளவில் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் எனும் ஊட்டி அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார். அங்கு விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து, அவருடன் தேநீர் அருந்தினார். அங்கு, நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பு குறித்து கேட்டறிந்தார்.
அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு கூடலூர் செல்லும் வழியில் தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் முத்தநாடு மந்துக்கு மதியம் 1 மணியளவில் சென்றார். அங்கு வந்த அவரை தோடரின மக்கள் தலைவர் மந்தேஷ்குட்டன், மாவட்ட ஊராட்சி தலைவர் மு.பொன்தோஸ், தமிழ்நாடு காங்கிரஸ் பழங்குடியினர் பிரிவு மாநில தலைவர் ப்ரியா நாஷ்மிகர் மற்றும் தோடரின மக்கள் தங்களது பாரம்பரிய சால்வை அணிவித்து வரவேற்றனர்.
முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த மூன் போ மற்றும் அடையாள் ஓவ் கோயில்களை பார்வையிட்டார். அந்த கோயில்களின் பராம்பரியம் குறித்து ராகுல் காந்திக்கு கோயில் பூசாரி விளக்கினார். பின்னர், தோடர் இளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கியதை கண்டுகளித்து, தோடரின மக்களுடன் நடனமாடினார். பெண்களுடன் நடனமாடிய ராகுல் அங்கிருந்த சிறு குழந்தையை தூக்கி முத்தம் கொடுத்து கொஞ்சினார். மேலும் அரவேணு பகுதியில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த விவசாய பெண்களிடம் நேரில் சந்தித்து தேவைகளை கேட்டறிந்தார்.
சுமார் அரை மணி நேரம் அங்கு செலவிட்ட ராகுல் காந்தி, அங்கிருந்து வயநாடு புறப்படும் போது, அவரது பயணம் குறித்து கேட்டதற்கு, ‘நான் பழங்குடியின மக்களை நேசிக்கிறேன். அவர்களை சந்தித்தது இனிமையான தருணம்’ என்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் வயநாடு புறப்ட்டுச் சென்றார். ராகுல் காந்தி வருகையையொட்டி முந்தநாடு மந்தில் பலத்த பாதுகாப்பு பணியில் நீலகிரி காவல்துறையினர் ஈடுபட்டனர்.
ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாரத் ஜோடோ யாத்ராவின் ஒரு பகுதியாக கூடலூரில் நடைபயணம் மேற்கொண்டார். தற்போது இரண்டாம் முறையாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்ததால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவர் கோயம்புத்தூரிலிருந்து கார் மூலம் கோத்தகிரி மார்கமாக வந்தார். அவருக்கு அரவேணு பகுதியில் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். மக்களை கண்டதும் வாகனத்திலிருந்து இறங்கி அவர்களுடன் கைக்குலுக்கி பேசினார். உற்சாகமடைந்த பெண்கள் ‘வருங்கால பிரதமர் ராகுல் காந்தி’ என கோஷம் எழுப்பினர். அங்கிருந்து உதகை வந்தவருக்கு சேரிங்கிராஸ் பகுதியில் உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷ் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.