500 மில்லி நானோ யூரியா , 45 கிலோ சாதாரண யூரியா மூட்டைக்கு சமம்

மத்திய உரம், ரசாயனத்துறை மந்திரி சதானந்தகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், நானோ யூரியா உற்பத்தியை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளோம். விவசாயத்துறையில் இது புதிய புரட்சியை ஏற்படுத்தும். இது பாட்டில்களில் விற்பனை செய்யப்படும். ஒரு பாட்டில் விலை ரூ.240 ஆகும். ஒரு பாட்டில் நானோ யூரியா, 45 கிலோ சாதாரண யூரியா மூட்டைக்கு சமமாகும். நாட்டில் 3 இடங்களில் இந்த நானோ யூரியா உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 4 இடங்களில் இத்தகைய தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த நானோ யூரியா மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.28 ஆயிரம் கோடி கிடைக்கும். மத்திய அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி மானியம் வழங்குவது மிச்சமாகும். இந்த பருவகாலத்தில் 28 கோடி நானோ யூரியா பாட்டில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. ஒரு பாட்டிலில் 500 மில்லி யூரியா இருக்கும் இந்த நானோ உரம், விவசாயிகளுக்கு ஒரு அரிய வரமாகும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த உரமான இது, மண்ணின் பலத்தையும் பாதுகாக்கும் தன்மையை கொண்டது. நாட்டில் ஆண்டுக்கு 330 லட்சம் டன் யூரியா பயன்படுத்தப்படுகிறது. இதில் 90 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நானோ யூரியா வகையால், நாம் வழக்கமாக பயன்படுத்தும் யூரியா பயன்பாடு 20 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சதானந்தகவுடா தெரிவித்தார்.