சென்னையில் ஒவ்வொரு முறை பெருமழை மற்றும் வெள்ளம் வரும்போது பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர் வழித்தடங்கள் முற்றிலும் மாயமானதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். ஒரு நீர் நிலையில் இருந்து இன்னொரு நீர் நிலைக்கு இடையே இருந்த இணைப்புகள் மாயமான நிலையில் அவற்றை உருவாக்க அரசு முன்னுரிமை அளித்து பணிகளை செய்தது. இதேபோல் கால்வாய்களில் இருந்த அடைப்புகளை அகற்றுவது, ஆகாயத்தாமரைகளை அகற்றுவது, கால்வாய்களை செப்பனிட்டு தடுப்பு சுவர்கள் அமைப்பது, பாலங்கள் தேவைப்படும் இடங்களில் அமைப்பது போன்ற பணிகளை சென்னை மாநகராட்சி செய்து வந்தது.
இந்நிலையில் பணிகள் பாதி நடந்து கொண்டிருந்த நிலையில் 36 மணி நேரம் மிகப்பெரிய அளவில் மழை பெய்த காரணத்தால், மிக மோசமான வெள்ள பாதிப்பு சென்னையில் ஏற்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பில் இருந்து சென்னை படிப்படியாக மீண்டு வருகிறது. பல இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மின்சாரம் 4 நாட்களுக்கு பிறகு வந்துள்ளது. சில இடங்களில் ஐந்து நாட்களுக்கு பிறகு இன்று தான் மின்சாரம் வந்துள்ளது. இந்நிலையில் இன்னும் சில இடங்களில் வெள்ளத்தை வடிய வைக்கும் பணிகளும், மின்சாரம் கொடுக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் வெள்ளத்தடுப்புக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து நீர் மேலாண்மை நிபுணர் பேராசிரியர் ஜனகராஜன் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், புயல் மற்றும் கனமழை பொழிகின்ற போது, சென்னை மட்டுமல்ல உலக நகரங்கள் எல்லாமே பாதிக்கப்படுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக குறுகிய நாட்களில் அதிக மழை பெய்கிறது. இனி இதை தடுக்க முடியாது. இது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது.
சென்னை நகரம் சமதளமான நகரம். சென்னையில் பள்ளிக்கரணை போன்ற பகுதிகள் கடல் மட்டத்திற்கு கீழ் உள்ளது. எனக்கு தெரிந்து தெற்கு ஆசியாவில் இதுபோல் வடிகால் கட்டமைப்பு நகரம் இல்லை. சென்னையில் வடிகால் அமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. சென்னையில் 3 ஆறுகள் உள்ளன 12 பெரிய கால்வாய்கள் உள்ளன.. 18 சிறிய கால்வாய்கள் உள்ளன. இன்றைய வெள்ளப்பாதிப்புக்கு இன்றைக்கு இது காரணம் என குறிப்பிட்டு சொல்ல முடியாது. சென்னைக்குள் இருந்த ஏரிகள் பலவற்றை இன்றைக்கு காண முடியவில்லை.
சென்னையின் கட்டமைப்பு நகர விரிவாக்கத்திற்காக பாழ்படுத்தப்பட்டு விட்டது. வளர்ச்சிக்காக ஏரிகள், வாய்க்கால்கள், காடுகள் எல்லாவற்றையும் சென்னையில் இழந்துவிட்டோம்… இனி அதை சரி செய்யவே முடியாது. முழுவதுமாக தண்ணீர் இனி வடிகால் வழியாகவே செல்லும் என ஒரு போதும் சொல்ல முடியாது.. எல்லா பகுதியிலும் சிமெண்ட் போடுவதால் 95 சதவீதம் நீர் வெள்ளமாகத்தான் செல்லும்.புதிய நகரம் உருவாக்கினாலும் சென்னையில் வெள்ளம் இருக்காது என சொல்ல முடியாது.. வெள்ளம் ஏற்பட்ட போது எல்லாம் என்ன கற்றோம் என்ற படிப்பினை நம்மிடம் இல்லை.
சென்னையில் 4,000 கோடி அல்ல 40,000 கோடி செலவு செய்தாலும் இதுபோன்ற மழைக்கு ஒன்றும் செய்ய முடியாது . அதேநேரம் சென்னையில் 4,000 கோடி செலவு செய்து வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தியது பயன் அளித்துள்ளது. இரு வடிகால் கட்டமைப்புக்கு இடையே இணைப்பை ஏற்படுத்தினார்கள். வடிகால்கள் மிஸ்ஸான இடங்களில் முன்னுரிமை அளித்து வடிகால்களை உருவாக்கினார்கள். 100 சதவீதம் பிரமாதமாக செய்து விட்டார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் முடிந்த முயற்சியை செய்திருக்கிறார்கள்.
ஆனால் என்ன தவறு நடந்ததது என்றால், புயலின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டோம். குறுகிய கால நடவடிக்கையாக இனி ஆறுகளை இருந்தபடி விரிவாக்கம் செய்ய வேண்டும். வடிகால் கால்வாய்களை எல்லாவற்றையும் சரியாக பராமரித்து வைக்க வேண்டும். ஆறுகள் கடலில் சேரும் இடங்கள் எப்போதும் தடையில்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஏரிகளில் நீரை சேமிக்க வேண்டும். பல்லாவரம் ஏரியை இரண்டாக்கி விட்டார்கள். சாலை அமைக்க அனுமதி கொடுத்தது யார்? இனி அதுபோல் ஒரே ஒரு ஏரியை உருவாக்க முடியுமா? உருவாக்கவே முடியாது. இனி அதுபோல் ஏரியை உருவாக்க இடமே இல்லை.. சென்னையின் 3-வது மாஸ்டர் பிளானில் சுற்றுச்சூழலை காக்க என்ன செய்திருக்கிறார்கள்… பரந்தூர் விமான நிலைய திட்டத்தை பொறுத்தவரை 11 ஏரிகள் அந்த பகுதியில் உள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளும் உள்ளது. பரந்தூர் டூ சென்னை வளர்ச்சியால் இன்னும் வெள்ள பாதிப்பு அதிகமாகவே செய்யும்.
பொதுமக்கள் மழை நீரை சேமிக்க உறுதியேற்க வேண்டும். அரசின் எல்லா துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எப்போதும் செயல்பட வேண்டும். வருடம் முழுவதும் வெள்ள பாதிப்பை தடுப்பதை பற்றி சிந்திக்க வேண்டும். அரசு பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அதை செயல்படுத்தவும் வேண்டும். பேரிடர் வரும் போது மட்டுமல்லாமல் எல்லா காலமும் இதை செய்ய வேண்டும். அப்படி இருந்தால் பாதிப்பை ஓரளவு குறைக்கலாம்” என தெரிவித்தார்.