போலி ஆவணங்கள் மூலம் தங்களது சொத்துக்களை அபகரித்துக் கொண்டவர்களிம் இருந்து மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். போலி பத்திரப்பதிவு மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் நில மோசடி சம்பவங்களும், அரங்கேறி வருகின்றது. இதனால் பாதிக்கபட்ட மக்கள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மட்டும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் வேடசந்தூர் பகுதியில் உள்ள தங்களது பல கோடி ரூபாய் மதிப்புள்ள 31 ஏக்கர் சொத்துக்களை சிலர் கூட்டு சதி செய்து முறைகேடான ஆவணங்கள் மூலம் பத்திரம் தயார் செய்து விற்பனை செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக ஜமால் முகமது, ஜெய்னுல் ஆபிதீன், வசிம் ராஜா, ஜாகிர் நியாஸ், சண்முகம் செட்டியார் ஆகிய ஐந்து பேர் தான் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களுடைய நிலத்தை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் நிலங்களை ஜமான் முகமது, வசீம் ராஜா உள்ளிட்டோர் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். மோசடி செய்த நிலத்தை தங்களுக்கு மீட்டுத் தருமாறு கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மேலும் தங்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி வரை அனைவரையும் தெரியும், எங்களை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டல் விடுகின்றனர்.
மேலும் நீங்கள் நீதிமன்றத்திற்கு சென்றாலும் நாங்கள் பணத்தை கொடுத்து சரி செய்து விடுவோம் என மிரட்டுவதாக கூறியுள்ளனர். 128 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு தங்களுடைய சொத்துக்களை மீட்டு தர வேண்டும்” என அவர்கள் தெரிவித்தனர்.