100 நாள் வேலை திட்ட பெண்களிடம் வேலை செய்யாமல் பணிபுரிந்ததாக கணக்கு காட்ட ரூபாய் வசூல்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாவக்கல் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணிபுரிய, பெண்களுக்கு அட்டை வழங்கப்பட்டு அவர்களுக்கான பணிகளை பிரித்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சி நிர்வாகத்தை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தால் பணிதள பொறுப்பாளராக அனுமதிக்கப்பட்ட ஒரு சில நபர்கள், கிராமப்புற பெண்களிடையே பேசி, ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றி வருவதாக கணக்கு காட்ட வேண்டும் எனில், தினமும் தலா ரூ.100 கொடுத்தால், பணிபுரிவது போல் கணக்கு காட்டி, அதற்கான பணத்தை தங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

பணம் கொடுத்தவர்கள் பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லை. மற்ற வேலைக்கு சென்றவாறே சம்பாதிக்கலாம் எனக்கூறி, வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பெண்களிடம் தலா ரூ.100 வசூலிப்பதை கிராமப்புற பெண்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.