ஜார்கண்ட் மாநிலத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்தார். இவர் மீது நில சுரங்க முறைகேடு புகார் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு விசாரணைக்கு அழைப்பு கோரி விடுக்கப்பட்ட 10 சம்மன்களை நிராகரித்தார்.
அதன்பிறகு கடந்த மாதம் 20-ம் தேதி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் ராஞ்சியில் வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் 30 மணிநேரம் மாயமானார். இதையடுத்து மீண்டும் ராஞ்சியில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். 7 மணிநேர விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “சக்திவாய்ந்த ஒரு பழங்குடியினத் தலைவரான ஹேமந்த் சோரன் அநியாயமாக கைது செய்யப்பட்டிருப்பதற்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன். இது பாஜக ஆதரவு மத்திய அமைப்புகளின் பழிவாங்கும் செயல், வெகுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மதிப்பைக் குறைக்கும் திட்டமிட்ட சதி.
ஹேமந்த் சோரன் எனது நெருங்கிய நண்பர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் அவர் பக்கம் உறுதியாக நிற்பேன் என்று நான் சபதம் செய்கிறேன். இந்த முக்கியமான போரில் ஜார்க்கண்ட்டின் உறுதி மிக்க மக்கள் நிச்சம் பதிலடிகொடுப்பார்கள், வெற்றி பெறுவார்கள்” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.