மாட்டிறைச்சி, இந்தி மொழி, கலாச்சார காவலர்கள் என பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றது ஹரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று அக்டோபர் 4-ஆம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக 67 வேட்பாளர்களின் பெயர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது. இந்த முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் எம்எல்ஏ, எம்பிக்களின் வாரிசுகளுக்கு சீட் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இருப்பினும் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தி காரணமாக, ஹரியானா பாஜக மூத்த தலைவரான ஷம்ஷேர் கில், கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகினார். அதாவது உக்லானா சட்டமன்றத் தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்று பஞ்சாயத்து வெடித்தது. ஷம்ஷேர் கில் ஒருவரின் பெயரை குறிப்பிட கட்சி தலைமை அதனை ஏற்க மறுத்து வேறு ஒருவருக்கு சீட்டை ஒதுக்கியது. இதற்கு ஷம்ஷேர் கில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
“உக்லானா தொகுதி தவறாக ஒதுக்கப்பட்ட இருப்பதன் மூலம் கட்சிக்கு மட்டுமின்றி.. ஒட்டுமொத்த ஹரியானாவுக்குமே பாதிப்பை ஏற்படுத்தும். பாஜக இனி அடல் பிஹாரி வாஜ்பாயின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கட்சியாக இருக்கப்போவதில்லை” என்று கூறிவிட்டு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டார்.