கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, திருநறுங்குன்றம், பட்டியல் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி – செல்வி தம்பதிக்கு 18 வயது மகள் ரேகா. செல்வி கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள நண்பர் ஒருவர் மூலமாக பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவை என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து செல்வி தனது 18 வயது மகளை திருவான்மியூர் உள்ள எம்எல்ஏ மகன் வீட்டில் கடந்த வருடம் மே மாதம் பணிக்கு சேர்த்துள்ளார். பணிக்கு சேர்ந்த பின்னர் எம்எல்ஏ மகன் பேசிய சம்பளத்தை கொடுக்காமல் மிகவும் குறைந்து கொடுத்தாக கூறப்படுகிறது. மேலும் சம்பளம் கொடுக்காமல் அளவு அதிகமாக வேலை வாங்கியதால் சுதாரித்து கொண்ட அப்பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் தனக்கு வேலை பிடிக்கவில்லை, வீட்டுக்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகிய இருவரும் இளம்பெண்ணை இரவு பகல் பார்க்காமல் வேலை வாங்கியதுடன் அவரது கை, கன்னம், முதுகு ஆகிய பகுதியில் சூடு வைத்து சித்திரவதைப்படுத்தி உள்ளனர். பின்னர் ஆண்ட்ரோ மதிவாணன் தனது மனைவி மெர்லின் உடன் கடந்த பொங்கல் தினத்தன்று அந்த பெண்ணை அவரது சொந்த ஊரில் விட்டு விட்டு வந்ததாக தெரிகிறது.
அப்போது பெண்ணின் உடலில் சூடு வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அம்மாவட்ட காவல்துறை விசாரணை நடத்தி இந்த பிரச்சினை திருவான்மியூர் பகுதியில் நடைபெற்றதால் திருவான்மியூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளதால் இச்சம்பவம் குறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை பாதிக்கப்பட்ட பெண் சார்பில் யாரும் புகார் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில் “சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், எளிய குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, இத்தனை கொடூரமாகத் தாக்கியிருப்பது, திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது. மாதம் ரூ.16,000 ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5,000 மட்டுமே இத்தனை மாதங்களாக ஊதியம் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது. உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.