வி.கே. சசிகலா: “தானம் கொடுத்த மாட்டின் பல்லை பிடித்து பதம் பார்த்தானாம்” // அனல் பறக்கும் பேச்சு!

பெங்களூர் சிறையில் இருந்து வி.கே. சசிகலா விடுதலையாகி தமிழகம் வந்தபோது அவரது காரில் அதிமுக கொடி கட்டியிருந்ததை கடுமையாக விமர்சித்த சி.வி.சண்முகத்தின் கோட்டையான விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுக நிர்வாகி முகம்மது ஷெரீப் இல்ல திருமண விழாவில் அதிமுக கொடி கட்டிய காரில் வி.கே. சசிகலா தனது ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டார்.

இன்று இதனை அதிமுகவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரமாக மாறி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் திருமண விழாவில் பேசிய வி.கே. சசிகலா, “முகம்மது ஷெரீப் போன்ற உண்மையான தொண்டர்களால்தான் இந்த இயக்கம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.உங்களை போன்ற உண்மையான தொண்டர்களை நம்பிதான் ஜெயலலிதா அவர்கள் இன்னும் நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும் என்று சூளுரைத்தார்.

மேலும் ஒரு மிகப்பெரிய ஆலமரம். இதில் எத்தனையோ கோடிக்கணக்கான பறவைகள் தஞ்சமடைந்து வந்துள்ளன. ஒரு சில பறவைகள் தன் வயிறு நிறைந்தால் போதும் என்று சுயநலத்துடன் இருக்கும். அவைகளால் கூட இருக்கும் மற்ற பறவைகளுக்கும் மரத்திற்கும் எந்தவிதமான பயனும் ஏற்படாது. அதே சமயத்தில் வேறு சில பறவைகள் இருக்கும் இடமே தெரியாது.

ஆனால், தன்னோடு இருக்கும் மற்ற பறவைகளை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் ஆலமரத்தில் அடைந்த பலன்களை நன்றியோடு நினைத்து மரத்திற்கும் பாதுகாப்பாக விளங்கும்.அதுபோன்ற ஆலமரமாக விளங்கும் இந்த இயக்கம் அழிந்துவிடாமல் துணை நிற்கும் உங்களை போன்ற உண்மையான தொண்டர்களை காப்பாற்றுவதற்கு என் எஞ்சியுள்ள வாழ்நாளை முழுவதுமாக அர்ப்பணிக்கிறேன்.

அம்மா என்று நாடகமாடிய ஒரு சில பொய் முகங்களுக்கு மத்தியில் உங்களை போன்ற உண்மையான தொண்டர்களுக்கு நம் இயக்கத்தில் சிறப்பான எதிர்காலம் உண்டு என்பதையும் இந்த நேரத்தில் உறுதியோடும் தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித் தலைவர் எந்தவிதமான சாதி, மத பேதமின்றி அனைவரின் பேராதரவோடு இந்த இயக்கத்தை உருவாக்கினார். ஜெயலலிதாவும் அதே வழியைதான் பின்பற்றினார். தற்போது நானும் இதே வழியைதான் தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறேன்.

மேலும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம். இது தொண்டர்களால் உருவான ஒரு பேரியக்கம். கழக தொண்டர்களுக்கும் தமிழக மக்களின் நலனுக்கு தொடங்கப்பட்டது. இது எத்தனையோ துரோகங்களையும், சூழ்ச்சிகளையும் வேரறுத்த இயக்கம். ஆகையால் எந்தவிதமான துரோகங்களாலும், சூழ்ச்சிகளாலும் இந்த இயக்கதை யாராலும் அடக்கிவிட முடியாது.

அதேபோல் இயக்கத்தை தனிப்பட்ட முறையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தொண்டர்கள்தான் இயக்கத்தின் உண்மையான சொந்தக்காரர்கள். எனவே எந்தவிதமான வேறுபாடின்றி தொண்டர்களை அரவணைத்து சென்றால்தான் இந்த இயக்கம் மீண்டும் புதுப்பொழிவுபெறும். இந்த உன்னத பணியை நாம் நிறைவேற்றிக் காட்டுவோம்.

ஜெயலலிதா அவர்கள் சொன்ன கதை எனக்கு நினைவுக்கு வருகிறது “ஒரு புத்த மடாலயத்தில் உள்ள குருமார்கள் மிகவும் கவலையில் இருந்தனர். ஒரு காலத்தில் அந்த மடாலயம் அந்த பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்றிருந்த மடாலயம். தற்போது மதிப்பு குறைந்து பாதாளத்துக்கு போய்கொண்டிருந்தது. குருமார்களில் ஒருவரோ தானே கடவுள் என்ற மமதையிலும் மற்றவர்களோ கிடைத்தது போதும் என்று எதைப்பற்றியும் சிந்திக்காமலும் இருந்து வந்துள்ளனர்.

இவர்களின் நடவடிக்கைகளால் மடாலயத்தின் சிறப்பும் குறைந்துகொண்டே சென்றது. மடத்தின் உள்ளேயே பிட்சுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். பொறுக்க இயலாமல் குருமார்கள் தங்களைவிட அனுபவம் வாய்ந்த குருவை சந்தித்து பிரச்சனைகளை எடுத்து சொன்னார்கள். அந்த குரு சற்று நேரம் ஆழ்ந்து யோசித்துவிட்டு, உங்கள் மடத்தில் புத்தர் இருக்கிறார். நீங்கள் எவரும் அவரை கண்டுகொள்ளவும் இல்லை, மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும் என்று கேட்டார்.

இதை கேட்ட குருமார்கள் மடத்துக்கு வந்து புத்த பிட்சுகளிடம் விபரம் சொன்னார்கள். அவர்களுக்கும் ஆச்சரியம். அன்றிலிருந்து சுற்றி இருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக்கூடும் என்று அனுமானித்து எல்லோரையும் அரவணைத்து பணிவாகவும் அன்பாகவும் மரியாதையாகவும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்தது. இதில் இருந்து நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் யாராக இருந்தாலும் தனிமனித விருப்பு வெறுப்புகளை விலக்கி அனைவருக்கும் மதிப்பளித்து ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் எந்த ஒரு செயலும் சிறப்பு வாய்ந்ததாக அமையும்.

அதிமுகவில் தொடர்ந்து தொண்டர்களைக்கூட ஒதுக்குகிறார்கள், நீக்குகிறார்கள் கவலைப்படாதீர்கள். இது எதுவுமே நிலையானது அல்ல. இதுபோன்ற வெற்று அறிவிப்புகளுக்கு எந்தவிதமான மதிப்பும் கிடையாது. இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதை மனதில் வைத்தே தனித்துவமான சட்டத்திட்டங்களை உருவாக்கினார். அதையே ஜெயலலிதாவும் மதித்து தனது இறுதி மூச்சு வரை கடைபிடித்து வந்தார்.

எனவே நமது இருபெரும் தலைவர்கள் காட்டிய அதே வழியில் பயணிக்கும் நம்மால் இந்த இயக்கத்தை வெற்றிப்பாதையில் பயணிக்க முடியும். இங்குள்ள சிலர் கட்சிக்கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்று இடையூறு செய்வதாக சொன்னார்கள். அதாவது தானம் கொடுத்த மாட்டின் பல்லை பிடித்து பதம் பார்த்தானாம் என்று ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுதான் இப்போது நினைவுக்கு வந்தது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக இன்று ஒன்றை மட்டும் சொல்கிறேன். கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அப்படி சொல்பவர்கள் திமுகவை சேர்ந்தவர்களாகவோ அல்லது திமுகவினருக்கு மறைமுகமாக உதவி செய்பவர்களாக இருக்கக்கூடியவர்களாக இருக்கக்கூடும். அதிமுக ரத்தம் உடம்பில் ஓடினால் கட்சியை காப்பது பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர இருப்பவர்களை விரட்டியடித்து கட்சியை பலவீனப்படுத்த மாட்டார்கள்.

இதுபோன்ற ஒருசிலரை பார்க்கையில், கட்சிக்கு எதிரான திட்டங்களை மனிதில் வைத்து செயல்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவர்களின் எண்ணம் என்றைக்கும் ஈடேறாது என்பதை இந்த கட்சியில் 38 ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு தமிழச்சியாக உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன். எம்.ஜி.ஆர். மறைந்தபோது ஏற்பட்ட அதே சோதனைகள் தான் மீண்டும் ஏற்பட்டு இருக்கிறது.

அன்று இரண்டே பெண்கள் கருணாநிதியின் சூழ்ச்சிகளை முறியடித்து நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிக் காட்டினோம். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை புறம்தள்ளிவிட்டு உங்கள் நேரத்தை கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இனி வரும் காலம் நம்முடையதே. நாளை நமதே.” என தெரிவித்தார்.