வி.கே. சசிகலா சூளுரை: அதிமுகவை என் தலைமையின் கீழ் கொண்டு வருவேன்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஷெரீப் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளராகவும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்தவர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முகம்மது ஷெரீப் கவுன்சிலர் சீட் கேட்ட நிலையில், அடுத்த முறை பார்க்கலாம் என சி.வி.சண்முகம் கூறி விரித்துள்ளார்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய வி.கே. சசிகலா தன்னை மிகக் கடுமையாக விமர்சித்த சி.வி.சண்முகத்தை பழிவாங்க மெல்லமெல்ல காய்களை நகர்த்த ஆரம்பித்தார். இதனால், அதிருப்தி அடைந்த முகம்மது ஷெரீப், சி.வி.சண்முகத்திற்கு எதிரியாக கருதும் வி.கே. சசிகலா டீமில் கட்சி தாவினார்.

இந்நிலையில் முகம்மது ஷெரீப்பின் மகள் திருமணம் திண்டிவனத்தில் நேற்று பெற்ற திருமணத்தில் வி.கே. சசிகலா கொடி கட்டிய காரில் சென்று கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.பின்னர் திண்டிவனத்தில் வி.கே.சசிகலா செய்தியாளர்களைச் சந்திப்பின்போது, “அதிமுக தலைமையை நான் ஏற்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதற்காகத்தான் நான் செயல்பட்டு வருகிறேன். அதிமுக இப்படி இருப்பதால் திமுகதான் பயனடைகிறது.

அதிமுக ஒன்றாக இணைவதை திமுகவினர் யாருமே விரும்பமாட்டார்கள். இதே நிலை நீடிக்க வேண்டும் என்றுதான் திமுகவினர் நினைக்கிறார்கள். 38 ஆண்டு கால அனுபவம் கொண்ட நான், விரைவில் அதிமுகவை வழி நடத்துவேன். அதிமுகவின் கட்சிக் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது என்று கூறியது மட்டுமல்லாமல் அப்படி சொல்பவர்கள் திமுகவுக்கு மறைமுகமாக உதவி செய்பவர்கள் என்றார். அதிமுகவை காப்பது பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமே தவிர, இருப்பவர்களை விரட்டி அடித்து கட்சியைப் பலவீனப்படுத்தக் கூடாது.

மேலும் சென்னை வானகரத்தில் நடக்கவிருப்பது உண்மையான அதிமுக செயற்குழு கூட்டம் கிடையாது. எம்.ஜி.ஆர். மறைந்தபோது ஏற்பட்ட அதே சோதனைகள்தான் தற்போது மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு பெண்கள் சேர்ந்து அப்போது கட்சியை மீட்டெடுத்து முன்னேற்றினோம். அதேபோல விரைவில் இப்போதுள்ள பிரச்னையையும் சரி செய்து, என் தலைமையின் கீழ் அதிமுகவை கொண்டு வருவேன் என்று வி.கே. சசிகலா தெரிவித்தார்.