விரைவில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மலரும்…

மதுரையில் 10 தென் மாவட்டங்களில் இருந்து மட்டும் 4 லட்சம் பேர் பங்கேற்க மாநாடு நடைபெற்றது. மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிகையில், மாபெரும் சபையில் நீ நடந்தால் மாலைகள் விழ வேண்டும், மாற்று குறையாத மன்னன் இவன் என்று போற்றி புகழ வேண்டும் என எம்.ஜி.ஆர். பாடினார். ஒன்றரை கோடி தொண்டர்களை உயிராக நினைத்தவர் ஜெயலலிதா. இவர்களின் ஒட்டுமொத்த உருவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கின்றார்.

இந்த இடம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடு. இந்த படைவீடு மாவட்டத்தின் சார்பில் அவருக்கு வைரவேல் கொடுத்தோம். அந்த வேல் எதற்கு கொடுத்தோம். இதன் மூலம் தி.மு.க. ஆட்சியை சம்காரம் பண்ண போகிறவராக அவதாரம் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். இந்த மீனாட்சி பட்டினத்துக்கு பல பெருமை உண்டு. 1973-ல் எம்.ஜி.ஆர். திருப்பரங்குன்றத்திற்கு வந்தார். அவர் வந்த ரெயில் 10 மணி நேரம் தாமதம். ஆனால் மகாத்மா காந்தி வரும்போது 6 மணி நேரம் தான் காலதாமதம். 2010-ம் ஆண்டு மதுரையில் ஜெயலலிதா தலைமையில் மதுரையில் நடத்திய ஆர்ப்பாட்டம் தி.மு.க.வை 10 ஆண்டு காலம் வனவாசம் செய்ய வைத்தது.

இன்றைக்கு 2023-ல் மதுரையில் எடப்பாடி பழனிசாமி வீர உரை நிகழ்த்தி உள்ளார். ஏற்கனவே பொம்மை முதலமைச்சர் தூக்கமில்லை என்றார். இந்த மாநாடு பெரிய வெற்றி பெற்றுள்ளது. இனி அவருக்கு தூக்கமே வராது. 2024-ல் நீங்கள் சுட்டிக்காட்டும் வேட்பாளரை வெற்றி பெற செய்வது தான் தொண்டனுடைய ஒரே லட்சியம். அதைசெய்து காண்பிப்போம். விரைவில் உங்கள் தலைமையில் தமிழகத்தில் அ.தி.மு.க.வின் ஆட்சியை கொடுப்பீர்கள். அதற்கு இந்த மீனாட்சி பட்டணம் சாட்சி. இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.