“இது கேப்டனின் மோதிரம்.. கேப்டன் வாரிசு விஜய பிரபாகரனுக்கு இதனை அணிவிக்கிறேன்..” எனக் கூறி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அணிவித்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தேமுதிகவின் 19-வது ஆண்டு செயற்குழு குழு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கட்சி சார்ந்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டு உள்ளார். மாநில இளைஞரணி துணை செயலாளராக விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டு உள்ளார். தேமுதிகவின் துணை செயலாளராக இருந்த எல்.கே. சுதீஷ் அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். விஜய பிரபாகர் மேடை ஏறி தந்தை விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மரியாதையை செலுத்திவிட்டு சிறிது நேரத்தில் இறங்க முற்பட்டார்.
அப்போது “பிரபா.. பிரபா கொஞ்சம் நிக்கணும்” என தடுத்து நிறுத்தி பிரேமலதா விஜயகாந்த். “இது கேப்டனுடைய மோதிரம். இந்த நாளில் தனது தந்தையின் மோதிரத்தை விஜய பிரபாகர் அணிய ஆசைப்பட்டார். கேப்டனின் மூத்த மகன் என்ற முறையிலே அட்சய திருதியை நாளில் கேப்டனின் வாரிசுக்கு அவரது மோதிரத்தை பரிசளிக்கிறேன்” எனப் பேசினார். இதையடுத்து, உணர்ச்சிப் பெருக்குடன் மோதிர விரலை தொண்டர்களிடம் விஜய பிரபாகர் காட்டினார். தொடர்ந்து, தனக்கு மோதிரத்தை அணிவித்த தனது தாய் பிரேமலதா விஜயகாந்த் காலில் விழுந்து விஜய பிரபாகர் ஆசி பெற்றார்.