நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 -ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் அவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருக்குச் சென்று விட்ட நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். விஜயலட்சுமியின் புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல்துறை நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அடுத்த ஒரு மாதத்தில், வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தனது வழக்கறிஞர்களுடன் சென்ற நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக கூறி எழுத்துப்பூர்வமான கடிதத்தை அளித்தார். தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, விஜயலட்சுமிக்கு அடைக்கலம் கொடுத்திருந்த நிலையில், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மீண்டும் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு பெங்களூருக்குச் சென்றுவிட்டார் விஜயலட்சுமி. சீமானுக்கு எதிராக வீடியோ வெளியிட்டு வந்த வீரலட்சுமிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை விஜயலட்சுமியும் வீடியோ வாயிலாக பேசி இருந்தார்.
மேலும், சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றது பற்றி அதிருப்தியோடு பேசி இருந்தார். திரும்பவும் சென்னைக்கு வரும் மனநிலையில் இல்லை. சீமான் சாரிடமும் பேசினேன். வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை குறித்துத் தெரியவில்லை. முதலில் என்னை விசாரித்தார்கள். சீமானுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பினார்கள். என்னால் தனி ஒருவராகப் போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்குப் போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை. சீமான்தான் சூப்பர். அவருக்குத்தான் தமிழ்நாட்டில் ஃபுல் பவர் இருக்கிறது. அவர் முன்னால் யாருமே ஒண்ணுமே பண்ண முடியாது. நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி. அதில் பேசியுள்ள அவர், “எனது வழக்கின்போது, 2 விபச்சாரிகளை வைத்து திமுக அரசியல் செய்வதாக நாம் தமிழர் கட்சியினர் சொன்னபோது ஆளுங்கட்சியான திமுக, எந்த அளவுக்கு இந்த வழக்கில் தீவிரமாக விசாரித்து எனக்கு நியாயம் வாங்கித் தந்திருக்க வேண்டும்? ஆனால், ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். சீமான் ஒருபக்கம், நாம் தமிழர் கட்சியினர் ஒருபக்கம் திமிர் பிடித்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். 12 வருடங்களாக இந்த வழக்கில் நியாயம் கிடைக்காமல் பெண்ணான நான் கதறிக் கொண்டிருக்கிறேன்.
இது ஒன்றும் தீர்க்க முடியாத வழக்கு அல்ல. காவல்துறைக்கு தெரியும் இல்லையா? கடந்த மார்ச் மாதத்தில், சீமான், மதுரை செல்வம் என்பவர் மூலமாக பேச்சுவார்த்தை வந்து, கயல்விழிக்கு தெரியாமல் நான் 50 ஆயிரம் கொடுக்கிறேன் எனக் கூறி வீடியோ வாங்க என்னை எப்படி எல்லாம் டார்ச்சர் செய்தார், நான் எப்படி கதறிக்கொண்டு வந்து புகார் கொடுத்தேன் என்பது எல்லோருக்கும் தெரியுமில்லையா? தெரிந்தால் கூட எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள். 2011-ல் எனது வழக்கை வைத்து அஇஅதிமுக சீமானை பாக்கெட்டில் போட்டுக் கொண்டது.
வரக்கூடிய லோக்சபா தேர்தல் நேரத்தில் எனது வழக்கை எடுத்து சீமானை பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம் என யாராவது, எந்த அரசியல் கட்சியாவது பிளான் வைத்திருந்தால், நான் இப்போதே சொல்லி விடுகிறேன், நான் யாருக்கும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேன். இதே தமிழ்நாட்டில் சீமானுக்கு பயந்து, நான் வாழ்வதற்கு கூட வீடு கொடுக்காமல் செய்தார்கள். தூக்கி கர்நாடகாவில் போட்டார்கள். கர்நாடகா என்னைக் காப்பாற்றியது. எனது அம்மாவுக்கு இறுதிச் சடங்கு கூட செய்யவிடாமல் செய்தார்கள். கர்நாடகாவில் பிறந்த ஒரே காரணத்திற்காக, 12 வருடங்களாக எனக்கு நியாயம் தேடித் தராமல் அலைக்கழிக்கிறார்கள்.
இதற்கு நான் முடிவு கட்டுவேன். பல மேட்டர் வெளியே வரும்.. உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.. 12 வருடங்களாக என்னிடம் தமிழ்நாடு காவல்துறை ஆதாரங்களை வாங்கிக்கொண்டு நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள், என் போனையும் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் எனக் கூறி கர்நாடகா நீதிமன்றத்தில் வழக்கை போடுவேன். அன்றைக்குத்தான் சீமான் – விஜயலட்சுமி இடையேயான போரில் ஒரு நியாயம் கிடைக்கும். யாரிடமும் இனி தமிழ்நாட்டில் கெஞ்ச மாட்டேன். யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன். ஒருநாள் உங்களுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுப்பேன். நான் இதை விடவே மாட்டேன்” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.