வருண்குமார் எடுத்த அஸ்திரம்: சேவியர் பெலிக்ஸ் நாம் தமிழர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம்..!

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது அதிமுக சார்பாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலவர் கருணாநிதி விமர்சிக்கும் சண்டாளன் என்ற பாடல் ஒன்றை பாடினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. சாண்டாளன் என்ற வார்த்தை ஆதி திராவிட பிரிவில் ஒரு அமைப்பாகும். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து தென்காசியில் வைத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

ஆனால் அன்றைய தினமே சாட்டை துரைமுருகனை நீதிமன்றம் விடுதலை செய்ததது. ஆனால் அடுத்த ஒரு சில தினங்களில் சாட்டை துரைமுருகன் பேசிய ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியானது. குறிப்பாக சீமான், இயக்குனர் அமீர் உள்ளிட்டோருடன் பேசிய ஆடியோக்கள் இணையதளத்தில் வீக் ஆனது. இதற்கு சாட்டை துரைமுருகன் இதற்கெல்லாம் காரணம் திருச்சி காவல் கண்காணிப்பாளர்  வருண்குமார் என குற்றம்சாட்டினார். ஏற்கனவே பல முறை சாட்டை துரைமுருகனை எஸ்.பி .வருண்குமர் பல வழக்குகளில் கைதும் செய்துள்ளார்.

மேலும் கடந்த ஆகஸ்ட் 4 -ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து பொதுமேடையில் தொண்டர்கள் மத்தியில் அவ்வளவு ஆபாச வார்த்தைகளை பேசிய சீமானுக்கு கண்டனங்கள் குவிந்தது. தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தலைவன் எவ்வழியோ…என்பதற்கு ஏற்றாற்போல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் அதே போல் அருவருக்கத்தக்க வகையில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகின்றனர். இந்த சூழலில் இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் புகார் அளித்தார். அந்த புகாரில், “நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் கண்ணன் என்பவர் எனது குடும்பத்திற்கு ஆபாச வார்த்தைகளால் மிரட்டல் விடுத்துள்ளார்.

இவை அனைத்தும் முழுக்க முழுக்க இடும்பாவனம் கார்த்திக், சாட்டை துரைமுருகன், சீமானின் தூண்டுதலிலேயே நடக்கிறது. குறிப்பாக திட்டமிட்டு என் மீதும் என் குடும்பத்தின் மீதும் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை ஆகும். காவல்துறை கண்காணிப்பாளர் குடும்பத்திற்கே கொலை மிரட்டல், குறிப்பாக என் தாய்க்கும், என் மனைவிக்கும் ஆபாசப் பாடல் மூலம் அவதூறு பரப்பி உள்ளார்.

என் மனைவி ஒரு சாதாரண குடும்பப் பெண் மட்டும் இல்லை, அவர் ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆவார். ஆகையால் என்னையும், என் குடும்பத்தினருக்கும், கொலை மிரட்டல் விடுத்தது மட்டும் அல்ல, ஆபாச வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சமயத்தில்தான் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், அவரது மனைவி, அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதள பக்கத்தில் ஆபாசமாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சீமான் திருச்சி எஸ்பி வருண்குமார் பெயரைக் குறிப்பிடாமல் ஜாதிய நோக்கத்துடன் அவர் செயல்படுவதாக பகிரங்கமாகவும் விமர்சித்தார். இதனையடுத்து திருச்சியில் பல இடங்களில் காவல் கண்கண்ணிப்பாளர் வருண்குமாருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் நோட்டீஸ் ஒட்டினர்.

இந்நிலையில் இது தொடர்பாக திருச்சி காவல் கண்கணிப்பாளர் வருண்குமார் வெளியிட்டுள்ள பதிவில், அரசியலுக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது வீட்டில் உள்ள பெண்களையும், எனது குழந்தைகளையும், எனது குடும்பத்தாரையும் அவதூறு பேசி, மிரட்டல் விடுத்த நபர்களை விடமாட்டேன். சட்டத்தின் முன்னால் கண்டிப்பாக கொண்டு வந்து நிறுத்துவேன். என் சட்டப் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதை தூண்டி விட்ட நபர்களையும் நீதித்துறையின் முன் கொண்டு வந்து நிறுத்துவேன். வெளிநாடுகளில் இருந்து ஆபாசமாக பதிவு செய்யும் போலி ஐடிகளையும் விடப்போவதில்லை. சட்டத்தின் மேல், நீதித்துறையின் மேல், 100% எனது நம்பிக்கையை வைக்கிறேன். ஆபாசத்திற்கும் அவதூருக்கும் இறுதி முடிவுரை எழுதுவோம் என கூறி இருந்தார். இதனையடுத்து சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்ய்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கண்ணன் என்பவரை அதிரடியாக கைது செய்து, திருச்சி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்ய தீவிர ஆலோசனையில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் சீமான் சார்பாக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் சேவியர் பெலிக்ஸ், திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் விளக்கம் கேட்ட நோட்டீசுக்கு பதில் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அதில், ‘‘காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் சாதி என்ன என்பதே தெரியாது. சாட்டை துரைமுருகனிடம், வருண்குமாரின் சாதி இது என்று ஒரு காவல் அதிகாரி கூறியதாக என்னிடம் சொன்னதை நம்பி நான் பேசிவிட்டேன் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த தகவலும் தெரியாது.

இளம் அதிகாரியான அவருக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அவர் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறு கருத்து விவகாரத்துக்கும் எனக்கும் எந்த விதமான தொடர்பு இல்லை. நான் காவல் துறை மற்றும் காவலர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவன். காவல்துறையினருக்கு 8 மணி நேரம் வேலை இருக்க வேண்டும் உள்பட போலீசாரின் உரிமைகளுக்கு நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விளக்கம் கடிதம் சமூக வலைதளங்களிலும் பரவியது. இந்நிலையில், கட்சி தலைமையின் ஒப்புதல் இல்லாமல் திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு தன்னிச்சையாக விளக்கம் கடிதம் கொடுத்ததாக வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் சேவியர் பெலிக்ஸ் கட்சியிலிருந்து அவரை அதிரடியாக நீக்கி சீமான் உத்தரவிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.