108 வைணவ திவ்ய தேசங்களில் 31 -வது திவ்ய தேசமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் விளங்கி வருகின்றது. காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலமாக கருதப்படுகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே காலம் தொட்டே மோதல் ஏற்பட்டு வருவது வழக்கமான ஒன்றாகும்.
இந்நிலையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள ‘அனந்த சரஸ்’ எனும் குளத்தில் உள்ள ’அத்தி வரதர்’ 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம். கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அத்தி வரதர் எழுந்தருளும் வைபவம் உலக அளவில் புகழ்பெற்றது. ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.
கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற வைகாசி பிரம்மோற்சவவத்தின்போது மூன்றாம் நாள் இரவு நடந்த ஹனுமந்த வாகன உற்சவத்தின்போது வேதபாராயணம் செய்வதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. பெருமாளுக்கு படைக்கப்பட்ட தோசை, வடையை யாருக்கு தருவது என்பதில் இரு பிரிவினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக மாறிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது.
கடந்த நவம்பர் மாதத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அருகே தேசிக சுவாமிகளுக்கு பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. வேதாந்த தேசிகர் சுவாமிகள் வீதியுலாவின்போது வரதராஜபெருமாள் கோயில் அருகே வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதற்காக குவிந்தனர். அப்போது தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக கூறி வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அறநிலையத்துறை அதிகாரிகளின் சமாதான பேச்சு வார்த்தைகளுக்கு மத்தியில் பின்னர் இயல்புநிலை திரும்பியது.
இந்நிலையில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் நடைபெற்ற பார்வேட்டை உற்சவத்தின் போது பிரந்தம் பாடுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதனால் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.