வங்கி கணக்கு உங்கள் பெயரில் தொடங்க எங்களிடம் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாக கூறியதால் ஆதார் எண், பான் கார்டு ஆகியவற்றை கொடுத்து இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் வசதியானவர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரை குறி வைத்து பார்சல் மோசடி, ஏடிஎம் மோசடி என நாளுக்கு நாள் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் ஆன்லைன் மோசடி அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் திருவாரூரில் அரங்கேறி இருக்கிறது. CBI அதிகாரி எனக் கூறி மருத்துவரை மிரட்டி ஒரு கோடியே 19 லட்சம் ரூபாயை பறித்து இருக்கிறது ஒரு கும்பல்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மீரான் உசேன் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மேலும் அப்பகுதியில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அவரது செல்போனுக்கு வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. தொடர்ந்து பேசிய மர்ம நபர் தான் மும்பையில் CBI அதிகாரியாக பணியாற்றுவதாகக் கூறியதோடு, மருத்துவர் மீது போதை பொருள் ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளதாக கூறினார்.
மேலும் டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக கூறி ஆதார் பான் கார்டு விவரங்களை கேட்டுள்ளார். அச்சமடைந்த மருத்துவர், தான் ஒரு மருத்துவர் என்றும், மருத்துவமனை நடத்தி வருவதாகவும், தன் மீது எந்த தவறும் இல்லை என கூறி இருக்கிறார். அப்போது பேசிய மர்மநபர் இந்த அழைப்பை துண்டிக்காமல் நீங்கள் இரண்டு கோடி ரூபாய் பணத்தை வங்கி கணக்கு வேண்டும் இல்லை என்றால் நேரில் வந்து கைது செய்வோம் என கூறியுள்ளனர். பயந்து போன மீரான் உசேன் அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் தலா 55 லட்சம் மற்றும் 64 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 19 லட்சத்து 20 ஆயிரத்தை செலுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் மறுபடியும் அந்த கும்பல் போன் செய்து பணம் கேட்டதால் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த மீரா உசேன் இது குறித்து திருவாரூர் மாவட்ட சைபர் கிரைமில் புகார் கொடுத்தார். புகார் தொடர்பாக நடத்திய விசாரணையில் திருச்சியை சேர்ந்த ஜாகிர் உசேன், பெனட்ரிக் ராஜா ஆகியோரது வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், டெலிகிராமில் எளிதாக பணம் சம்பாதிப்பது குறித்து தேடிய போது இந்தியில் பேசி தங்களை தொடர்பு கொண்ட கும்பல் வங்கி கணக்கு தொடங்கி கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாக கூறியதாகவும், அதனால் தங்களது ஆதார் எண், பான் கார்டு ஆகியவற்றை கொடுத்து வங்கி கணக்கை தொடங்கி கொடுத்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறை நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பணத்தை பெற்ற மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.