வங்கியில் வாடிக்கையாளர்களின் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகைகள் வைத்து மோசடி..!

வங்கியில் நகை அடகு வைப்பதுதான் பாதுகாப்பு என அவசர தேவைகளுக்காக மக்கள் வங்கிகளை நாடும் நிலையில் அங்கேயே மோசடிகள் ஆங்காங்கே அரங்கேறுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அதன் வரிசையில், வாடிக்கையாளர்களின் 533 சவரன் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்த வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் ICICI வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையில், மண்டல மேலாளர் கிருஷ்ணகுமுமார் தலைமையிலான குழுவினர் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அந்த வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது, அவை தங்க நகைதானா என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, முறைப்படி பரிசோதனை செய்ததில் அந்த நகைகள் அத்தனையும் கவரிங் என தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த தங்க நகைகளுக்குப் பதிலாக கவரிங் நகைகளை வங்கியில் வைத்துவிட்டு ஒரிஜினல் நகைகளை வங்கி மேலாளர் உள்ளிட்டோர் பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தனை தொடர்ந்து, விசாரணையில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 533 சவரன் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக மண்டல மேலாளர் சிவகங்கை மாவட்ட காவல்த நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறை, கல்லல் வங்கி கிளை மேலாளர் விக்னேஷ், உதவி மேலாளர் ராஜாத்தி, மோசடிக்கு உடந்தையாக இருந்த ரமேஷ், சதீஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி சம்பவத்தால் அந்த வங்கியில் நகை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் கொந்தளித்துள்ளனர்.