வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ.16 லட்சம் ஆட்டைய போட்ட பலே ஆசாமி

சென்னை, தியாகராய நகர், கோபாலகிருஷ்ணா சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் வினோத் தம்பிரான். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தரமணியில் சொந்தமாக சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வினோத்துக்கு கோவூரைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவரது அறிமுகம் கிடைக்க, சண்முகநாதன் தனக்கு பல்வேறு வங்கியில் செல்வாக்கு இருப்பதாகவும், கடன் தேவைப்பட்டால் தன்னிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே தனது தொழிலை விரிவுபடுத்த எண்ணிய வினோத் 2 கோடி ரூபாய் கடன் பெற்று தருமாறு சண்முகநாதனிடம் கேட்டுள்ளார். உடனே சண்முகநாதன், தனக்கு தெரிந்த வங்கியில் கடன் பெற்று தருவதாகவும், அதற்கு கமிஷன் மற்றும் ஆவண செலவு என ரூ.16 லட்சம் தருமாறும் கேட்டுள்ளார். இதை நம்பி வினோத் கடந்த அக்டோபர் மாதம் ரொக்கமாக 16 லட்சத்தை சண்முகநாதனிடம் கொடுத்துள்ளார்.

பணம் பெற்றுக்கொண்ட சண்முகநாதன் இரண்டு மாதங்கள் ஆகியும் கூறியது போல் கடன் பெற்று தராததால் சந்தேகமடைந்த வினோத் அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணத்தை தர முடியாது என மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வினோத் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இந்த சம்பவம் குறித்து மாம்பலம் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.