வங்கிக் கணக்கே இல்லாத கூலித் தொழிலாளி கணக்கில் ரூ.9.90 கோடி டெபாசிட்

இந்தியாவில் சாமானிய மக்களின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுப் பணம் பரிமாற்றம் செய்வதற்கு பேர்போன மாநிலம் பிஹார். அப்படி பணம் பரிமாற்றம் செய்வதை கண்டுபிடிக்கப்படுவதும் வாடிக்கையாக நிகழும் ஒன்றாகும்.

அதன்வரிசையில் பிஹார் சபுவால் நகரம் அருகேயுள்ள சிசானி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விபின் சவுகான் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இணைவதற்காக, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் சென்று கணக்குத் தொடங்க விரும்பினார்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் சேவை மைய அலுவலர், விபின் சவுகானின் ஆதார் எண்ணைப் பதிவு செய்து வங்கிக் கணக்கு தொடங்க முற்பட்டபோது, அவர் பெயரில் ஏற்கெனவே வங்கிக் கணக்கு இருப்பதாகவும் மேலும் அவருடைய வங்கிக் கணக்கில் ரூ.9.99 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.

மேலும் சவுகான் பெயரில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி வங்கிக் கணக்கு தொடங்கி, 2017-ம் ஆண்டு பிப்ரவரி வரை கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆனால், சவுகான் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் அவரின் புகைப்படம், கைரேகை, கையொப்பம் என எதுவுமே இல்லாத நிலையில் ஆதார் கார்டு எண் மட்டுமே அவருடையதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.