ரோந்து பணியின் போது உதவி ஆய்வாளரை சுற்றிவளைத்து தாக்கிய மாணவர்கள்

சென்னை ரோந்து பணி கொடுங்கையூர் மூலக்கடை அடுத்த அண்ணா நகர் 5-வது அவென்யூவைச் சேர்ந்த பாலமுருகன். இவர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே சாதாரண உடையில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது மேம்பாலம் கீழே சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 4 பேரை உதவி ஆய்வாளர் பாலமுருகன் அழைத்து விசாரணை நடத்தியபோது, போதையில் இருந்த அந்த கும்பல் பாலமுருகனிடம் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த 4 பேரும் சேர்ந்து சுற்றிவளைத்து உதவி ஆய்வாளர் பாலமுருகனை திடீரென கற்களாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பாலமுருகனுக்கு முகத்தில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டதில், மூக்கு தண்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சக்திவேல் நேரில் சந்தித்து உதவி ஆய்வாளர் பாலமுருகனுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் ஆர்.கே.நகர் காவல்துறை தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் 4 பேரும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.