இப்படியும் சிலர் இருப்பதால் தான் நல்ல மழை பொழியுது என்று ஒருசிலர் சொல்ல நாம் கேட்டுள்ளோம். அவ்வப்போது ஒருசிலர் தனக்கு பிடித்த முறையில் நடந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். இன்று நம்மை வாயடைக்க செய்த மனிதர் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் உள்ள ஒரு லாட்டரி கடைக்காரர்.
கேரளா அரசின் முக்கிய வருமானமாக லாட்டரி சீட்டு விற்பனை கேரளாவில் அரசே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இதன்காரணமாக லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது… அதனால்தான், வாரம் முழுக்க லாட்டரி சீட்டு குலுக்கல் இங்கு நடைபெறும். இதுபோக, பண்டிகை காலங்களான ஓணம் பம்பர், விஷு பம்பர், கிறிஸ்துமஸ் பம்பர் மற்றும் சிறப்பு லாட்டரி சீட்டுகள், அதிக பரிசு தொகையுடன் அறிவிக்கப்படுகின்றது. இந்த லாட்டரி சீட்டு விற்பனையில் சிறுசிறு கடை முதல் ஏராளமானோர் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் ஒரு லாட்டரி கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இதே பகுதியை சேர்ந்த நர்ஸ் சந்தியா, அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். கடைக்காரரும், ரெகுலர் கஸ்டமர் சந்தியாவுக்கு, ஒரு சீட்டை எடுத்து தனியாக ஒரு கவரில் போட்டு வைத்துவிடுவார். பரிசு குலுக்கல் நடந்த பிறகு, அந்த சீட்டுக்கு பரிசு விழுந்திருக்கிறதா? என்பதை பார்த்து விட்டு அதனை நர்ஸ் சந்தியாவிடம் சொல்வார். ஆனால், கடைக்காரர் தனக்காக எடுத்து வைக்கும் லாட்டரி சீட்டை ஒருநாள்கூட, நர்ஸ் சந்தியா வாங்கி பார்த்ததே இல்லை, கடைக்காரர் என்ன சொல்வாரோ, அதை மட்டும் கேட்டுக் கொள்வார். அந்த அளவுக்கு நம்பிக்கை அந்த கடைக்காரர் மீது நர்ஸ் சந்தியா வைத்துள்ளார்.
இப்படி பல மாதங்களாகவே சந்தியா லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார். சமீபத்தில் ஸ்திரி சக்தி லாட்டரி விற்பனை நடந்தது.. இதற்காக வழக்கம்போல், சீட்டு ஒன்றை எடுத்து நர்ஸ் சந்தியாவுக்காக கடைக்காரர் எடுத்து வைத்துள்ளார்… கடந்த வாரம் அதன் குலுக்கல் முடிவுகள் வெளியானது… இதில் நர்ஸ் சந்தியாவுக்காக கடைக்காரர் எடுத்து வைத்திருந்த சீட்டுக்கு, முதல் பரிசான ரூ.75 லட்சம் விழுந்திருந்தது. நர்ஸ் சந்தியாவுக்கு கடைக்காரர் எடுத்து வைத்த சீட்டின் நம்பர்கூட தெரியாது.. அந்த சீட்டுக்குதான் பரிசு விழுந்த தகவலும் தெரியாது. ஆனால், கடைக்காரருக்கு தெரியும்.
கடைக்காரை எந்த அளவுக்கு சந்தியா நம்பினாரோ, அதே அளவுக்கு தங்கள் கஸ்டமரையும் கடைக்காரர் நம்பினார். சீட்டு விற்பனை என்றாலும், அதில் ஒரு நேர்மையும், நாணயமும் கொண்டிருக்க வேண்டும் என்று நம்பினார்.. அதனால்தான், சந்தியாவுக்கு போனை போட்டு, முதல் பரிசு ரூ. 75 லட்சம் விழுந்திருப்பதை சொன்னார்.. இதைக் கேட்டு திக்குமுக்காடிப்போனார் சந்தியா.. ஒருபக்கம் முதல்பரிசு சந்தோஷம், இன்னொரு பக்கம் கடைக்காரரின் நாணயம் கண்டு ஆச்சரியப்பட்டார்.