ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் உட்பட 2 பேர் கைது..!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நிலத் தரகர் ஜெய்சங்கர். இவர், கடந்த 22-ம் தேதி பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆர்.கே.பேட்டை அடுத்த விளக்கணாம்பூடி புதூரில் உள்ள 70 சென்ட் நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பீடு செய்வதற்காக சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகினார்.

அப்போது, அந்த நில ஆவணத்தை வழிகாட்டி மதிப்பீடுக்காக மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க, ஆர்.கே.பேட்டை சார்பதிவாளரான, கடலூர் மாவட்டம், ஆலாடு கிராமத்தைச் சேர்ந்த செல்வராமச்சந்திரன் ரூ.50ஆயிரத்தை லஞ்சமாகக் கேட்டுள்ளார். அதற்கு ரூ.35 ஆயிரம்தருவதாக பேசப்பட்டது. ஆனால், லஞ்சம் கொடுக்கவிரும்பாத ஜெய்சங்கர், செல்வராமச்சந்திரன் மீது திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தார்.

இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை ஆலோசனையின் படி, நேற்று செல்வராமச்சந்திரனிடம் ரசாயனபவுடர் தடவப்பட்ட ரூ.35 ஆயிரத்தை ஜெய்சங்கர் லஞ்சமாக அளிக்கச் சென்றார். அப்போது, செல்வராமச்சந்திரன் அறிவுறுத்தலின்படி, ஒப்பந்த ஊழியரான, கணினி இயக்கும் சிவலிங்கம் என்பவரிடம் ஜெய்சங்கர் ரூ.35 ஆயிரத்தை வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை செல்வராமச்சந்திரன், சிவலிங்கம் ஆகியோரை கைது செய்தனை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.