சென்னை, கொசப்பேட்டையை சேர்ந்த சேகர் என்பவர் திருமுல்லைலவாயலில் உள்ள தனது வீட்டின் இடம் நில உச்சரம்பின் கீழ் அரசு கையகப்படுத்தியுள்ளதால் அதனை நீக்குவதற்கு பூந்தமல்லி சன்னதி தெருவில் அமைந்துள்ள நகர்ப்புற நிலவரி அலுவலகத்திற்கு கடந்த மாதம் அக்டோபர் 4-ம் தேதி சென்று, நில அளவை சார் ஆய்வாளர் ஐசக் என்பவரிடம் மனு கொடுத்துள்ளார்.
மேலும் மனுதாரர் கடந்த 2-ம் தேதி நில அளவை சார் ஆய்வாளர் ஐசக்கை சந்தித்து நிலுவையில் இருந்த தனது மனு குறித்து கேட்ட போது, அவரது மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதற்கு முதலில் ரூ.40 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு மனுதாரர் மாத ஓய்வூதியம் பெற்று வருவதால் இந்த தொகையை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். அதற்கு ஐசக் ரூ.20 ஆயிரம் கொடுத்தால் தான் மனுவின் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
அவருக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது நேற்று நில அளவை சார் ஆய்வாளர் ஐசக் தனது அலுவலகத்தில் வைத்து மனுதாரரிடமிருந்து லஞ்ச பணம் ரூ.20 ஆயிரம் பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார்.