ரூ.150 கோடி சுருட்டிய ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளரை விசாரிக்க 7 நாள் காவலில் விசாரிக்க உத்தரவு

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மதன் செல்வராஜ் என்பவர் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த பிரணவ் ஜுவல்லரிஸ், 0% செய்கூலி, 0% சேதாரம் என கவர்ச்சிகரமான விளம்பரத்தோடு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து மிக, மிகக்குறுகிய காலத்திலேயே சென்னை, புதுச்சேரி, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, கும்பகோணம், நாகர்கோவில், என பல இடங்களில் தமது கிளைகளை நிறுவியது.

பழைய நகைகளை அடகு கடையில் வைத்து ஏன் வட்டி கட்டுறீங்க? பழைய நகைகளை எங்களிடம் கொண்டு வந்து தாங்க, ஒரு வருடம் கழித்து, எந்த வித செய்கூலி, சேதாரமும் இல்லாமல், பழைய நகையின் எடைக்கு சமமாக புதிய நகைகளை அள்ளிட்டு போங்க என்றும் விளம்பரம் செய்தது பிரணவ் ஜுவல்லரி. இதனால் பெண்கள் மத்தியில் இந்த நிறுவனத்துக்கு ஏகபோக வரவேற்பு ஏற்பட்டது.

மேலும் 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் என மாதம் தோறும் 10,000 ரூபாய், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தனர். கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள், பிரணவ் ஜுவல்லரியின் பல்வேறு கிளைகளில் பணத்தைக் கட்டினர்.

மேலும், ஆயிரக் கணக்கானோர் பழைய நகைகளை கொடுத்து, ஓராண்டு முடிந்த பிறகு புது நகைகளை அள்ளிச் செல்ல காத்திருந்தனர். ஆனால், பிரணவ் ஜுவல்லரி நகைக்கடை, தங்கள் கிளைகளை அடுத்தடுத்து இழுத்து மூடிய நிலையில் திருச்சியில் உள்ள பிரணவ் ஜுவல்லரியும் மூடப்பட்டது.

இதையடுத்து, அதிர்ந்து போன வாடிக்கையாளர்கள் நூற்றுக்கணக்கானோர் காவல் நிலையத்தில் மதுரை, திருச்சி என பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி மீது மோசடி புகார் அளித்தனர். அதிக வட்டி தருவதாக கூறி தமிழகத்தில் 11-க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான மக்களை மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது.

பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் மற்றும் கார்த்திகாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இருவரும் தலைமறைவான நிலையில், அவர்களை காவல்துறை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கோரி மனு அளித்திருந்தனர். ஆனால் மதன் செல்வராஜ், இவரது மனைவி கார்த்திகா மதன் ஆகியோரது, முன்ஜாமீன் மனு கடந்த வாரம் உயர் நீதிமன்ற கிளையில் தள்ளுபடியானது.தேடப்பட்டு வந்த பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் மதுரையிலுள்ள பொருளாதார முதலீட்டு குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் இந்த நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி, மனுதாரரை 7 நாள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து, வரும் 18ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.