ராஜ் தாக்கரே: மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்..!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அனைத்து மசூதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டுமென மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

இந்நிலையில், மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் அமைந்துள்ள மசூதிகளில் உள்ள அனைத்து ஒலிபெருக்கிகளையும் அகற்ற வேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி இல்லை. கோயில்களில் ஆண்டு முழுவதும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும். ஆனால், கோயில்களில் எல்லா நேரமும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது இல்லை.

கோயிலுக்குச் செல்லும் மக்கள் சில நிமிடத்தில் இறைவனின் பாதத்தை தொட்டு வணங்கிவிட்டு வெளிவந்து விடுகின்றனர். பாலாசாஹேப் தாக்கரேவின் மகன் முதல்வராக இருந்த போதும் நான் ஒலிபெருக்கிகளை எதிர்த்தேன். எங்கள் கட்சியை சேர்ந்த சுமார் 17,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் மசூதிகளுக்கு முன்பாக அனுமன் சாலிசாவை பாடுவோம் என்று நான் சொல்லி இருந்தேன்” என மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் ராஜ் தாக்கரே தெரிவித்தார்.