ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி தனது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது மட்டுமின்றி அதை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டுள்ளார்.

மற்றொரு புறம் கோவை, மதுரை, தென்காசி, பெங்களூரூ மற்றும் கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று அவரை தேடும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டு இருப்பதாக மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்தது. மேலும் சைபர் கிரைம் காவல் மூலம் ராஜேந்திர பாலாஜியுடன் நெருங்கிய தொடர்புடைய நபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கைபேசி எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களுக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.