மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினில் இருந்து 15 கிமீ தூரத்தில் இருக்கும் பாத்நகர் என்ற பகுதியில் 12 வயது சிறுமி உடையின்றி உறுப்பில் ரத்தத்தோடு மட்டுமின்றி உடல் முழுக்க ரத்தத்தோடு நடந்து சென்றுள்ளார். அந்த சிறுமி 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் கதவை தட்டி உதவி கேட்டுள்ளார்.
எனக்கு ஆடை இல்லை. உடலில் ரத்தமாக இருக்கிறது. அதனால் என்னை காப்பாற்றுங்கள். எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எனக்கு உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைத்து சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த சிறுமி உதவி கேட்ட எல்லா வீட்டிலும் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைவரும் நீ உள்ளே வரக்கூடாது. வெளியே போ என்று துரத்தி அடித்துள்ளனர். மேலும் சிலர் அந்த சிறுமியிடம் பேசாமல் . சூ.. சூ என்று துரத்தி அடித்துள்ளனர்.
சிறுமி எனக்கு உதவி வேண்டாம். எனக்கு தண்ணீர் கொடுங்கள் என கதற இரக்கமில்லா மனித மிருகங்கள் விரட்டியடிக்க 8 கிமீ பரிதவித்த சிறுமி கடையில் ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். ஆசிரமத்தில் இருந்த சாமியார் சிறுமியை ஒரு துண்டுடன் மூடி, மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
மாவட்ட மருத்துவமனையில் சிறுமியின் மருத்துவப் பரிசோதனையில் கூட்டு பலாத்காரம் அவர் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சிறுமியின் வாய் உடைக்கப்பட்டு பேச முடியவில்லை. இதனால் கஷ்டப்பட்டு பேசி உள்ளார். சிறுமிக்கு ரத்தம் கொடுக்க கூட யாரும் வராத நிலையில் காவல்துறையினர் சிறுமிக்கு ரத்தம் கொடுத்தனர் என்ற சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி ம.பி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். “இந்த சம்பவம் இந்திய தாயின் இதயத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதிலிருந்து அவர்களை பாதுகாக்க முடியாமல் பாஜக அரசு இருக்கிறது.
இந்த மாநிலத்தில் நீதியும் இல்லை, சட்டம் ஒழுங்கும் இல்லை, அடிப்படை உரிமையும் இல்லை. மத்தியப் பிரதேசத்தின் பெண்களின் நிலையைக் கண்டு நாடு முழுவதும் வெட்கப்படுகிறது. ஆனால் மாநில முதலமைச்சருக்கும், நாட்டின் பிரதமருக்கும் வெட்கமே இல்லை. தேர்தல் வாக்குறுதிகளுக்கும், பொய்யான முழக்கங்களுக்கும் மத்தியில் தங்கள் மாநில பெண்களின் அலறலை அடக்கிவிட்டார்கள்” என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.