ரயில்வே வேலை மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மனைவி, மகள் பெயர்…!

கடந்த 2004 – 2009-ம் ஆண்டு வரை லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் குரூப் டி பிரிவில் பணி நியமனம் செய்வதற்கு லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் நிலங்களை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தீவிர விசாரணை மற்றும் சோதனை நடத்தி வந்தது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல் குற்றப்பத்திரிகையை நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவி, அவரது மகளும் எம்பியுமான மிசா பாரதி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.