ரகசிய இடத்தில் வைத்து விசாரணை: எடப்பாடி உதவியாளர் மீது வழக்கு: தோண்ட தோண்ட பல்வேறு முறைகேடுகள்

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த தமிழ்செல்வன் என்ற என்ஜினீயர் கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த மணி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக இருந்து வருகிறார்.

நண்பர் ஒருவர் மூலம் மணி எனக்கு அறிமுகமானார். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரை அணுகி அரசு வேலை வாங்கி தரும்படி கூறினேன். அப்போது அவர் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி அவரிடம் ரூ.17 லட்சம் கொடுத்தேன். பணம் பெற்று வருடக்கணக்கில் ஆகியும் அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவரிடம் அரசு வேலை வேண்டாம். கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டேன்.

ஆனால் அவர் கொடுக்க மறுத்து வருகிறார். மேலும் அவர் மிரட்டல் விடுக்கிறார். எனவே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்து ஏமாற்றிய மணி மற்றும் புரோக்கராக செயல்பட்ட அவரது கூட்டாளி செல்வகுமார் ஆகிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து குற்றப்பிரிவு காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி, புரோக்கராக செயல்பட்ட செல்வகுமார் ஆகியோர் பணம் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மணி மற்றும் செல்வகுமார் ஆகிய 2 பேர் மீது மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் மணி மற்றும் செல்வகுமார் ஆகிய 2 பேரையும் காவல்துறை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.இதில், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த 25 பேரிடம் ரூ.1 கோடியே 17 லட்சம் பெற்று, மோசடி செய்த மணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிலர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவிடம் புகார் கொடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.