வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 24-ம் தேதி வரை மாவட்டங்கள் வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தனது சுற்றுப்பயணத்தை நேற்று கோயம்புத்தூரிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தொடங்கினார். கோவை மாவட்டம் கோயம்புத்தூரில் தனது ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கழகத்தின் பொருளாளராக 12 ஆண்டுகள் இருந்தவன் நான். எங்களை கழகத்தில் இருந்து வன்முறையாக வெளியேற்றிவிட்டனர். வி.கே. சசிகலா உங்களுக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தார்கள். அவர்களை நீங்கள் என்ன வார்த்தையில் பேசினீர்கள்?. 11 எம்.எல்.ஏ ஆதரவுடன் இருந்த நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்து இருந்தால் ஆட்சி போயிருக்கும். நான் ஆதரவு கொடுத்ததால் ஆட்சியும், கட்சியும் காப்பாற்றப்பட்டது. தவறான வழியில் சென்றபோது எச்சரித்தேன். ஆனால் அதிகார போதை, பணத் திமிரில் எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அதனால் ஆட்சி போனது.
அடுத்தடுத்து தேர்தல்களிலும் தோற்றுப்போனதால் மக்கள் உங்களை ஏற்கவில்லை என்றுதானே அர்த்தம். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களாக வர இருத்தை தடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. தனிக்கட்சி துவங்கும் நோக்கமில்லை. கோரப் பிடியில் இருந்து அதிமுகவை கைப்பற்றி மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மாவிடம் ஒப்படைத்தால்தான் நன்றியாக இருக்கும்.
முதலமைச்சர் பதவி மூன்று முறை கொடுத்தார்கள். நான் திருப்பி கொடுத்துவிட்டேன். என்னை யாரும் துரோகி என்று சொல்ல முடியாது. நாங்கள் செய்த குற்றம் என்ன? இன்னமும் கட்சி தொண்டர்களின் உரிமைக்காக பாடுபட்டு வருகின்றேன். ஆட்சியில் இருந்தபோது கோப்புகள் என்னிடம் வந்துதான் செல்லும். அந்த ரகசியங்களை நான் அவிழ்த்துவிட்டால், எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறைக்குதான் செல்ல வேண்டும். இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் என தெரிவித்தார்.