மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று ரீல்ஸ் வெளியிட்ட 3 இளைஞர்களும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம், அந்த 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்தோ, பெங்களூரில் இருந்தோ, கேரளா செல்ல வேண்டும் என்றால் கோயம்புத்தூரை கடந்து தான் போக வேண்டும். சேலம்-கொச்சி சாலை கோயம்புத்தூர் வழியாக செல்கிறது. இந்த சாலை சில இடங்களில் 6 வழிச்சாலையாகவும், சில பகுதியில் 4 வழிச்சாலையாகவும் உள்ளது. அவினாசி முதல் கோயம்புத்தூர் நீலம்பூர் வரை எந்த இடையூறும் எந்த இடத்திலும் இல்லாத காரணத்தால் சராசரியாக 80 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் கூட போக முடியும்.
இந்த சேலம்-கொச்சி சாலையில் கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே 3 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றபடி ரீல்ஸ் வீடியோ எடுப்பதாகவும், அது மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த சென்ற காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பைக்கில் அதிவேகமாக சென்று ரீல்ஸ் எடுத்தபடி 3 வாலிபர்கள் வந்தனர். உடனே காவல்துறையினர் அந்த 3 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த சஞ்சய், டிக்சன் மற்றும் கோயம்புத்தூர் அருகே மலுமிச்சம்பட்டியை சேர்ந்த தமிழ் என்பதும், அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று ரீல்ஸ் எடுத்தது தெரிந்தது. உடனே காவல்துறையினர் அந்த 3 பேருக்கும் அபராதம் விதித்தனர். மேலும் அந்த 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அறிவுரை வழங்கினர். இதைத் தொடர்ந்து அந்த 3 பேரும் அபராத தொகையை செலுத்தி விட்டு காவல் நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானார்கள்.
இதற்கிடையே அந்த 3 பேரும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தை விட்டு வெளியே வருவது போன்றும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு இடையே அதிவேகமாக செல்வது போன்ற ரீல்ஸை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் மீண்டும் பதிவேற்றம் செய்தனர். அதை பார்த்த காவல்துறை அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காவல் நிலையம் முன்பு நிற்பதுபோன்றும், மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்வது போன்றும் ரீல்ஸ் வெளியான நிலையில், பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள்.
இதைத் தொடர்ந்து அந்த 3 பேரையும் காவல் நிலையம் வரவழைத்தனர். இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று ரீல்ஸ் வெளியிட்டதற்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, அந்த 3 பேரின் மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறை பறிமுதல் செய்தார்கள். மேலும் அவர்கள் 3 பேரிடமும் இனி மேல் சாலைகளில் அதிகவேகமாக சென்று ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்தனர்.