மு.க.ஸ்டாலின்: டிவியில வரனும்னு பேசுவாரு..! எடப்பாடி பழனிசாமிக்கு வேற வேலையே இல்லை!

மகளிர் உரிமைத் தொகையை தற்போதைய அரசு கடன் வாங்கித் தான் ஒவ்வொரு மாதமும் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்த நிலையில் அவருக்கு வேறு வேலையே கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த மேல்சித்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, தமிழகத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் பெரும்பாலும் பழுதடைந்த பேருந்துகள் தான். பெண்கள் இலவசமாக நகரப் பேருந்துகளில் பயணிக்கலாம் என்பது வெறும் அறிவிப்பு தான். மக்கள் நலத்திட்டம் இல்லை. மாதா மாதம் கடனை வாங்கித்தான் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்கள். இந்தக் கடன் மக்கள் தலையில்தான் விழும். திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மக்களை பாதிக்கும் திட்டங்கள்” என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.

திமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் மக்களை பாதிக்கும் திட்டங்கள். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஊர் ஊராக சென்று பெட்டி வைத்து பொதுமக்களிடம் மனு வாங்கினார். ஆனால் தற்போது அந்த பெட்டியை திறந்து மக்கள் பிரச்னைகளை தீர்க்கவில்லை. அத்தனையும் ஏமாற்று வேளை. கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் திமுகவினர். ” என விமர்சித்திருந்தார். இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலையே கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,”மதுரையில் தொடர்ந்து கனமழை பெய்யவில்லை. நேற்றுதான் மழை பெய்திருக்கிறது. இரவோடு இரவாக தண்ணீரை எல்லாம் எடுத்தாகிவிட்டது. மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்களும் முகாமிட்டு பணி மேற்கொண்டு வருகிறார்கள். எட்டு இடங்களில் தான் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. வேறு ஒன்றும் பிரச்சனையில்லை. இன்றைக்கு மழை வரும் என்று வானிலை மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்திருக்கிறது.

அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கிறது. சென்னையிலிருந்து பொறுப்பு அதிகாரிகளை அனுப்பி வைத்திருக்கிறோம். அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். நிவாரணப் பணிகளும் அங்கு நடந்து கொண்டிருக்கிறது. வானிலை மையம் வேறு ஏதாவது மாவட்டத்தில் மழை பெய்யும் என்று சொல்லியிருக்கிறார்களா? தென் மாவட்டங்களில் தான் மழை பெய்து கொண்டிருக்கிறது. அனைத்து ஊர்களிலும் மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது மழை வருவதை வைத்து அதற்கேற்றார்போல் நாங்கள் முடிவெடுப்போம். மகளிர் உரிமைத் தொகையை தற்போதைய அரசு கடன் வாங்கித் தான் ஒவ்வொரு மாதமும் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அவர் சொல்லிக்கொண்டு இருப்பார். அவருக்கு வேறு வேலையே கிடையாது. அவர் பெயர் பத்திரிகையில் வரவேண்டும். அவர் முகம் அடிக்கடி டி.வி-யில் வரவேண்டும் என்பதற்காக சொல்லிக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை என மு.க. ஸ்டாலின் பேசினார்.