“மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் தபால்காரர் போன்றவர்தான் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.
இதுகுறித்த கேள்விக்கு, “மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் தபால்காரர் போன்றவர்தான். தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பும் இதைத்தான் கூறியிருக்கிறது. தமிழ் மொழிக்கும், தமிழ்நாடு என்ற பெயருக்கும் எதிராக ஆளுநர் செயல்படுகிறார். தன்னை ஒரு தீவிர பாஜககாரராக ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டிக் கொள்கிறார். பதவிக்காலம் முடிந்த பிறகும் ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ளார்.” என தெரிவித்தார்.
மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றிய கேள்விக்கு, “புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதை திமுக எதிர்க்கிறது. மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது. தொகுதி மறுசீரமைப்பை முடக்க முயற்சிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் தொகுதி மறுசீரமைப்பு ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோன்று தற்போது மேலும் 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து பேச பிரதமரிடம் நேரம் கேட்டும் இதுவரை நேரம் கொடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க பாஜக மும்மொழிக் கொள்கையை மறைமுகமாக திணிக்கிறது. ஆட்சியை பிடிக்க விரும்பிய அதிமுக தலைவர்கள், பாஜகவின் விருப்பப்படி தமிழகத்தின் மீது நீட் தேர்வை திணித்தனர் . தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு நடத்தப்படவில்லை. திமுக அரசுக்கு மக்கள் ஆதரவு உள்ளதால், மக்களை திசை திருப்ப வேண்டிய அவசியம் இல்லை” என தெரிவித்தார். மேலும், திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்றும் பாமக இணையும் என்றும் கூறப்படுவது வதந்தி என்று திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.