தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவு பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரை வெளியேற்றும் பணியை அரசு முடுக்கி விட்டாலும், பல்வேறு இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாததால் பலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று 3-வது நாளாக கொளத்தூர் தொகுதி உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். முன்னதாக மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது,
கேள்வி:- நீங்கள் நிறைய பகுதிகளுக்கு சென்று கொண்டிருக்கிறீர்கள், நிலைமை எப்படியிருக்கிறது?.
பதில்:- மழையால் பாதிக்கப்பட்டு தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் எல்லாம் அரசாங்கம் சார்பாகவும், கட்சி சார்பாகவும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உணவு வசதி, தங்குவதற்கான ஏற்பாடு, மருத்துவ முகாம்கள் போன்ற எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறோம்.
கேள்வி:- மழைநீர் தேக்கம் சிறிது குறைந்திருக்கிறதா?.
பதில்:- ஓரளவுக்கு குறைந்திருக்கிறது, முழுமையாக குறையவில்லை. ஏனென்றால், ஏற்கனவே முந்தைய ஆட்சி ‘ஸ்மார்ட் சிட்டி திட்டம்’ என்று போட்டு, அதில் பல கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து நிதி வாங்கி, என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை.
முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடந்த உள்ளாட்சி துறையின் சார்பாக பணிகள் எதுவுமே நடைபெறவில்லை, கமிஷன் மட்டும் வாங்கியிருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. இருந்தாலும், நாங்கள் சமாளித்து பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். இப்பணிகள் முடிந்த பிறகு, இதுகுறித்து உரிய விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.
கேள்வி:- இதெல்லாம் முடிந்தபிறகு அந்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.
பதில்:- நிச்சயமாக, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.