போதைப் பொருட்களுக்கான நுழைவு வாயிலாக குஜராத் மாறிவிட்டதா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மும்தாஜ் படேல் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மும்தாஜ் படேல் , “போதைப் பொருட்களுக்கான நுழைவு வாயிலாக குஜராத் மாறிவிட்டதா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டிலும், கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் ரூ.1,300 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் கைப்பற்றிய போதைப் பொருட்களில் 30% குஜராத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் நாள்தோறும் நடக்கின்றன. தற்போதுதான் குஜராத் அரசு போதைப் பொருட்களுக்கு எதிரான சட்டத்தை இயற்ற முயல்கிறது. போதைப்பொருள் பழக்கம் சமூகத்தை கடுமையாக பாதிக்கிறது.
இதற்கு எதிராக ஒட்டுமொத்த சமூகமும் போராடிக் கொண்டிருக்கிறது. பஞ்சாபில்தான் போதைப் பொருள் புழக்கம் அதிகம் என நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், குஜராத்தில்தான் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. பாஜகதான் குஜராத்தை 30 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது” என மும்தாஜ் படேல் குற்றம் சாட்டினார்.