தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் அவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் மருது சகோதரர்களின் சிலைகளுக்கும் முதலமைச்சர் மாலை அணிவித்து செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 117-வது பிறந்த நாள் விழா மற்றும் 62-வது குருபூஜை இன்று நடைபெற உள்ளது. இவ்விழாவை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வெங்கல சிலைக்கு இன்று காலை 8.10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் உருவச் சிலைக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, அன்பில் மகேஷ், மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், டி.ஆர்.பி.ராஜா, கீதா ஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து கோரிபாளையம் சிலைக்கு வி.கே.சசிகலா, எடப்பாடி பழனிசாமி, சீமான், ஜி.கே.மணி, ஒ.பன்னீர்செல்வம், துரை வைகோ, திருநாவுக்கரசர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும், அமைப்பினரும் அணிவித்து மரியாதை செய்கின்றனர். ஆகையால், மதுரை மாவட்டத்தில் 3,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.