வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நகராமல் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17-ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிகனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
கொளத்தூர் பகுதிக்குட்பட்ட யானைகவுனி பகுதி, சென்னை பேசின் மேம்பாலம் போன்றவற்றை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மழை நீர் வெளியேற்றுதல் உள்ளிட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.