முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி பேரணி..!

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த முதுநிலை 2-ஆம் ஆண்டு பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்காக முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக மாணவர் அமைப்பு ஒன்று இன்று ஹவுராவில் உள்ள மேற்கு வங்க தலைமைச் செயலக அலுவலகம் அமைந்துள்ள நபன்னா நோக்கி பேரணி செல்வதாக அறிவித்துள்ளன. இதனையடுத்து தலைமைச் செயலகம் அமைந்துள்ள வளாகத்தைச் சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் கொல்கத்தா காவல்துறையினரும், ஹவுரா நகர காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். 19 இடங்களில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 முக்கிய இடங்களில் அலுமினியம் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஹவுரா காவல்துறை, கொல்கத்தா காவல்துறையை தாண்டி அதிரடிப் படையினர், பறக்கும் படையினர், அதிவிரைவு படை எனப்படும், தண்ணீர் டேங்குகள் என பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளை கூடுதல் ஆணையர் அந்தஸ்தில் உள்ள காவல் உயர் அதிகாரி மேற்பார்வை செய்கிறார். ஹாஸ்டிங்ஸ், ஷிப்பூர் சாலை, ஹவுரா மேம்பாலம், ஹூக்ளி மேம்பாலம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, நபன்னா அபிஜான் பேரணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு காவல்துறை விரிவான இமெயில் அனுப்பியதாக தெரிவித்துள்ளது. அதில் பேரணியில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள். அவர்களின் பெயர்கள் என்னென்ன? பேரணியில் கலந்து கொள்ளும் முக்கியப் பிரமுகர்கள் யார்? என்றெல்லாம் தகவல் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று மாலை மேற்கு வங்க காவல்துறை, இந்தப் பேரணிக்கு அனுமதியில்லை இது சட்டவிரோதமானது என்று கூறியது. இந்நிலையில் தான் இந்தப் பேரணியில் வன்முறையை ஏற்படுத்த சதி நிலவுவதாக வெளியான உளவுத் துறை தகவல் அளித்ததை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

உளவுத் துறை தகவலின்படி இன்று கொல்கத்தாவில் கல்லூரி சதுக்கத்தில் இருந்து ஒரு பேரணியும், ஹவுராவின் சந்த்ராகச்சியில் இருந்து ஒரு பேரணியும் நடைபெறவிருக்கிறது என காவல்துறை கூறுகின்றனர். இந்தப் பேரணிகள் இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்கவிருக்கிறது. கல்லூரி சதுக்கத்திலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து நபானா 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சந்த்ராங்கச்சியில் இருந்து நபானா 3 கிமீ தூரம். எனவே, இந்த இரு மார்க்கங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.